தலைப்புச் செய்திகள்

பங்களாதேஷ் கல்லூரி வளாகத்தில் விமானம் மோதியதில் 19 பேர் உயிரிழப்பு

பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் உள்ள ஒரு கல்லூரி வளாகத்தில் இன்று (21) அந்த நாட்டு விமானப்படை பயிற்சி விமானம் மோதியதில் – குறைந்தது 19 பேர் உயிரிழந்துள்ளனர்.

டாக்காவின் உத்தரா பகுதியிலுள்ள மேற்படி கல்லூரி வளாகத்தில் மதியம் 1.00 மணியளவில் மாணவர்கள் ஓய்வு எடுத்துக்கொண்டிருந்தபோது அல்லது வழக்கமான வகுப்புகளில் கலந்து கொண்டிருந்தபோது F-7 BGI விமானம் மோதியதாக தெரிவிக்கப்கப்படுகிறது.

விபத்தையடுத்து சிறுவர்கள் மற்றும் பெரியவர்கள் உட்பட 50 க்கும் மேற்பட்டோர் தீக்காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

“நான் என் குழந்தைகளை அழைத்துக்கொண்டு வாயிலுக்குச் சென்றபோது, பின்னால் இருந்து ஏதோ வருவதை உணர்ந்தேன்… வெடிச்சத்தம் கேட்டது. நான் திரும்பிப் பார்த்தபோது, நெருப்பும் புகையும் மட்டுமே பார்த்தேன்,” என்று கல்லூரி ஆசிரியர் மசூத் தாரிக் என்பவர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.

அண்டை நாடான இந்தியாவின் அகமதாபாத் நகரில் உள்ள ஒரு மருத்துவக் கல்லூரி விடுதியின் மேல் – ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதில், அதில் பயணம் செய்த 242 பேரில் 241 பேரும், தரையில் இருந்த 19 பேரும் கொல்லப்பட்ட ஒரு மாதத்திற்குப் பிறகு, இந்த சம்பவம் நடந்துள்ளது.