தலைப்புச் செய்திகள்

அறுகம்பே பகுதியில் மேலாடையின்றி திரிந்தமைக்காக தண்டனை வழங்கப்பட்டவர் பெண்ணா? ஆணா?: புதிய சர்ச்சை

பொத்துவில் – அறுகம்பே பகுதியில் தாய்லாந்து சுற்றுலாப் பயணி ஒருவர் மேலாடையின்றி கடந்த 14ஆம் திகதி – பொது இடத்தில் உலவியமைக்காக, அவருக்கு நீதிமன்றம் தண்டனை விதித்தமையை அடுத்து, குறித்த நபரின் பாலினத்தை நீதிமன்றம் எவ்வாறு விளங்கிக் கொண்டது என்று ஊடகவியலாளர் ஒருவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

26 வயதான தாய்லாந்து சுற்றுலாப் பயணியொருவர், அநாகரீகமான நடந்தமை மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்தமை ஆகிய குற்றச்சாட்டுகளில் கைது செய்யப்பட்டு, நேற்று முன்தினம் (15) பொத்துவில் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார்.

இதனையடுத்து குறித்த நபர் குற்றத்தை ஒப்புக்கொண்ட பின்னர், ஐந்து ஆண்டுகள் ஒத்தி வைக்கப்பட்ட இரண்டு வார கால மற்றும் ஒரு மாத சிறைத்தண்டனைகளை நீதிமன்றம் விதித்தது.

அறுகம்பேயில் ஒரு ஹோட்டலுக்கு அருகில் – குறித்த சுற்றுலாப் பயணி மேலாடையின்றி நடந்து செல்வதைக் காட்டும் படங்கள் சமூக ஊடகங்களில் பரவியதை அடுத்து, அவர் கைது செய்யப்பட்டார்.

இந்தப் பின்னணியில், குறித்த தாய்லாந்து நாட்டவரின் கடவுச் சீட்டின் நகல் ஒன்லைனில் வெளியாகியுள்ளதோடு, அவரின் பாலினம் ஆண் (M) என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அவரின் பெயருக்கு முன்னால் ஆண்களைக் குறிப்பிடும் ‘திரு’ (Mr) என்கிற எழுத்துக்களும் உள்ளன. குறித்த நபரின் தோற்றம் ஒரு பெண்போல் உள்ள போதும், அவரின் கடவுச் சீட்டில் அவர் ஆண் எனக் குறிப்பிடப்பட்டுள்ளமை பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து சுட்டிக்காட்டி எழுதியுள்ள ஊடகவியலாளர் ரங்கா ஸ்ரீலால்;

‘பொத்துவில் நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.எல்.எம். ஹில்மி, தாய்லாந்து சுற்றுலாப் பயணி ஒருவர் தனது மார்பை மூடவில்லை என்பதற்காக, அவர் ‘அநாகரீகமாக நடந்து கொண்டார்’ எனக் கூறி, அவரை குற்றவாளி என்று தீர்ப்பளித்து ஒரு சட்ட முன்னுதாரணத்தை ஏற்படுத்தியிருக்கலாம்.

ஆனால், இலங்கையில் ஆண்கள் இவ்வாறு நடந்து கொள்வது குற்றமல்ல. மூன்றாம் பாலினத்தை இலங்கை ஏற்றுக் கொள்ளவுமில்லை. எனவே கடவுச்சீட்டில் ‘ஆண்’ என்று குறிப்பிடப்பட்டுள்ள குறித்த நபருக்கு, நீதவான் ஹில்மி எவ்வாறு இந்தத் தீர்ப்பை வழங்க முடியும் எனும் அர்த்தப்பட, ஊடகவியயலாளர் ரங்கா ஸ்ரீலால் கேள்வியெழுப்பியுள்ளார்.

இலங்கைச் சட்டம் தற்போது ஆண் மற்றும் பெண் ஆகியவற்றுக்கு அப்பாற்பட்ட பாலின அடையாளங்களை அங்கீகரிக்கவில்லை. மேலும் ஆண்கள் பொது வெளியில் மேலாடை அணியாமல் திரிவதை குற்றமாகவும் சட்டம் கருதவில்லை. எனவே, நீதிமன்றத்தின் தீர்ப்பானது – வெளிநாட்டு பிரஜைகள், குறிப்பாக திருநங்கைகள் சம்பந்தப்பட்ட சட்ட நடவடிக்கைகளில், பாலினம் எவ்வாறு விளக்கப்படுகிறது என்பது குறித்து கவலைகளை எழுப்பியுள்ளது.