
காஸாவில் போர் நிறுத்தம் மேற்கொள்வது தொடர்பான பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதற்காக கத்தார் வெளியுறவு அமைச்சர் ஷேக் முகமது பின் அப்துல்ரஹ்மான் பின் ஜாசிம் அல் தானி, அமெரிக்க ஜனாதிபதியை இன்று (16) சந்திப்பார் என்று அல் ஜசீரா தெரிவித்துள்ளது.
ஜூலை 06 முதல் தோஹாவில் நடைபெற்று வரும் சமீபத்திய சுற்று போர் நிறுத்த பேச்சுவார்த்தைகளில் – இஸ்ரேலிய மற்றும் ஹமாஸ் தரப்பினர் பங்கேற்று வருகின்றனர்.
அவர்கள் காஸாவில் இருந்து கைதிகளை படிப்படியாக விடுவித்தல், இஸ்ரேலிய துருப்புக்களை காஸாவின் சில பகுதிகளிலிருந்து திரும்பப் பெறுதல் மற்றும் மோதலை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்த விவாதங்களை உள்ளடக்கிய 60 நாள் போர் நிறுத்தத்துக்கான அமெரிக்க திட்டம் குறித்து விவாதித்தனர்.
இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையில் ஒரு முக்கிய மத்தியஸ்தராக இருந்து வரும் கத்தாரில் நடந்து வரும் போர் நிறுத்த பேச்சுவார்த்தைகள் குறித்து “நம்பிக்கையுடன்” இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் மத்திய கிழக்கு தூதுவர் ஸ்டீவ் விட்காஃப் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
அமெரிக்கா, கத்தார் மற்றும் எகிப்திய மத்தியஸ்தர்கள், காஸாவில் போர் நிறுத்தத்தை மேற்கொள்வதில் ஒரு உடன்பாட்டைப் பெறுவதற்கு பணியாற்றி வருகின்றனர். இருப்பினும், பலஸ்தீனத்திலிருந்து இஸ்ரேல் இறுதியில் வெளியேற வேண்டும் என்பதில், இஸ்ரேலும் ஹமாஸும் பிளவுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.



