தலைப்புச் செய்திகள்

தென்கிழக்கு பல்கலைக்கழகத்திலிருந்து பொறியியல் பீட முதலாமாண்டு மாணவர்களை வெளியேறுமாறு உத்தரவு

– மப்றூக் –

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீட முதலாமாண்டு (E- 2022) மாணவர்களை பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. அந்த வகையில் மறு அறிவித்தல் வரை பல்கலைக்கழகத்தினுள் நுழைவதற்கு அவர்களுக்கு அனுமதியில்லை என, பல்கலைக்கழகத்தின் பதிவாளர் எம்.ஐ. நவ்பர் தெரிவித்தார்.

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் நேற்று (15) அதிகாலை பொறியியல் பீட முதலாமாண்டு மாணவர்கள் சிலர் தாக்கப்பட்டு நிலையில், வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்ட சம்பவத்தை அடுத்து, இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

மாணவர்களிடையே ஏற்பட்டுள்ள மோதல் நிலைமையைத் தவிர்ப்பதற்காகவே, முதலாமாண்டு மாணவர்களை – பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேற்றியுள்ளதாகவும் பதிவாளர் கூறினார்.

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீட முதலாமாண்டு மாணவர்கள் நேற்று அதிகாலை தாக்குதலுக்குள்ளான நிலையில், அவர்களில் நான்கு மாணவர்கள் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையிலும், மற்றொரு மாணவரும் பல்கலைக்கழக சாரதியொருவரும் ஒலுவில் வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும் பதிவாளர் நவ்பர் தகவல் வழங்கினார்.

கடந்த மாதம் பொறியியல் பீட முதலாமாண்டு மாணவர்களை, அதே பீடத்தைச் சேர்ந்த சிரேஷ்ட மாணவர்கள் பகிடிவதை செய்தமை தொடர்பான வீடியோ ஒன்று – சமூக ஊடகங்களில் வெளியானது. இதனையடுத்து பகிடிவதையில் ஈபட்டு 22 மாணவர்களுக்கு, பல்கலைக்கழகத்துக்குள் நுழைய நிர்வாகம் தடை விதித்தது.

ஆயினும், “நேற்றுக் காலை பொறியியல் பீட முதலாமாண்டு மாணவர்கள் தாக்கப்பட்டமை, பகிடிவதை தொடர்பான சம்பவம் இல்லை. அது வேறு வகையான உள்ளகப் பிரச்சினை” எனவும் பதிவாளர் நவ்பர் மேலும் தெரிவித்தார்.

இந்த நிலையில், பொறியியல் பீட மாணவர்கள் தாக்குதலுக்குள்ளாகி வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்பான செய்தி: தென்கிழக்கு பல்கலைக்கழக பொறியியல் பீட மாணவர்கள் மற்றும் சாரதி தாக்குதலுக்குள்ளான நிலையில் வைத்தியசாலைகளில் அனுமதி