
நாடு முழுவதுமுள்ள பல்கலைக்கழகங்களில் பகிடிவதையைத் தடுப்பதற்காக ஏற்கனவே வகுக்கப்பட்ட வழிகாட்டுதல்களை கண்டிப்பாக செயல்படுத்துமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு உச்ச நீதிமன்றம் இன்று (09) உத்தரவிட்டது.
கல்வி மற்றும் உயர்கல்வி அமைச்சர் இந்த வழிகாட்டுதல்களை செயல்படுத்த தேவையான நிதி மற்றும் தொழில்நுட்ப உதவி மற்றும் வசதிகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டுள்ளது.
2020ஆம் ஆண்டில் பகிடிவதை காரணமாக ஏற்பட்ட காயங்களால் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் தொடர்ந்து பாதிக்கப்பட்ட முதலாம் ஆண்டு பல்கலைக்கழக மாணவர் பசிந்து ஹிருஷான் டி சில்வா தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மனு மீதான தீர்ப்பை வழங்கும் போது, நீதியரசர்கள் ஷிரான் குணரத்ன, பிரியந்த பெனாண்டோ மற்றும் சோபித ராஜகருணா ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்றத்தின் மூன்று பேர் கொண்ட அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்தது.
இந்த உத்தரவுகள் எவ்வாறு செயல்படுத்தப்படுகின்றன என்பதற்கான முன்னேற்றத்தை மறுஆய்வு செய்ய, ஜனவரி 14 ஆம் திகதி வழக்கு மீண்டும் அழைக்கப்படவுள்ளது.



