தலைப்புச் செய்திகள்

காஸாவில் போரை முடிவுக்குக் கொண்டு வர, ஹமாஸ் முன்வைத்த நிபந்தனைக்கு நெதன்யாகு மறுப்பு

இஸ்ரேல் தனது படைகளை காஸாவிலிருந்து முழுமையாக திரும்பப் பெறு வேண்டுமென்றும், காஸாவில் போரை முடிவுக்குக் கொண்டு வரவேண்டுமென்றும் நிபந்தனை விதித்துள்ள ஹமாஸ், அதற்கு ஈடாக மீதமுள்ள 50 கைதிகளை விடுவிப்பதற்கு தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளது.

ஆனால், இஸ்ரேல் இதனை நிராகரித்துள்ளதோடு – ஹமாஸ் சரணடைந்து, ஆயுதங்களை கைவிட்டு, நாடுகடத்தப்பட்டால் மட்டுமே, போரை முடிவுக்குக் கொண்டுவர முடியும் எனத் தெரிவித்துள்ளது. இதற்கு ஹமாஸ் மறுப்புத் தெரிவித்துள்ளது.

இதேவேளை, இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் உயர் ஆலோசகரான ரான் டெர்மர், இந்த வாரம் போர்நிறுத்தம் குறித்த பேச்சுவார்த்தைகளுக்காக வொஷிங்டனுக்குச் செல்லவுள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன. மேலும் எதிர்வரும் வாரங்களில் பிரதமர் நெதன்யாகுவும் அங்கு பயணம் செய்வதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. இவையெல்லாம் ஒரு ஒப்பந்தத்துக்கான நகர்வு ஏற்படக்கூடும் என்பதற்கான அறிகுறியாக தெரிகின்றன என்று அல் ஜசீரா கூறியுள்ளது.

இந்த நிலையில், “நெதன்யாகு இப்போது ஹமாஸுடன் ஒரு ஒப்பந்தத்தை மேற்கொள்ளும் பொருட்டு -பேச்சுவார்த்தை நடத்தும் பணியில் ஈடுபட்டுள்ளார். அதில் பணயக்கைதிகளை திரும்பப் பெறுவதும் அடங்கும்” என்று அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் கூறியுள்ளார்.

12 நாள் போரில் ஈரானுக்கு எதிரான இஸ்ரேலின் ‘வெற்றி’, காஸாவிலுள்ள இஸ்ரேலியர்களை விடுவிப்பது உட்பட ‘பல வாய்ப்புகளை’ உருவாக்கியுள்ளது என்று நெதன்யாகு தெரிவித்துள்ளார்.