
அரசுக்குச் சொந்தமான மக்கள் வங்கியில் நடந்ததாகக் கூறப்படும் 90 ரூபாய் மில்லியன் மோசடி குறித்து முழு விசாரணை நடத்துமாறு கோட்டே நீதவான் நிலுபுலி லங்காபுர, சிஐடிக்கு உத்தரவிட்டுள்ளார்.
கிட்டத்தட்ட ஒரு தசாப்தத்திற்கு முன்பு நடந்ததாகக் கூறப்படும் இந்த சம்பவம் தொடர்பாக, சிரேஷ்ட சட்டத்தரணி குணரத்ன வன்னிநாயக்க தாக்கல் செய்த மனுவைத் தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதற்குப் பொறுப்பானவர்களைக் கண்டறிந்து, ஜுலை 30ஆம் திகதிக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு சிஐடியின் வணிகக் குற்றப் பிரிவுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
யசோதா ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் யசசிறி கஸ்தூரியாராச்சி ஒக்டோபர் 28, 2015 அன்று சிஐடி அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. சொத்து உரிமையை மாற்றுவதன் மூலம் மோசடியாக கடனைப் பெற, போலி ஆவணங்கள் பயன்படுத்தப்பட்டதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனது கட்சிக்காரரான கஸ்தூரியாராச்சிக்கு மரபுரிமையாக கிடைக்கப்பெற்ற 4,000 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள பஸ்யாலவில் உள்ள 48 ஏக்கர் நிலத்தை அடமானம் வைத்து, 90 மில்லியன் ரூபாய் கடன் பெறப்பட்டதாக சிரேஷ்ட சட்டத்தரணி குணரத்ன வன்னிநாயக்க நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
போலி ஆவணங்களைப் பயன்படுத்தி அரச வங்கியிடமிருந்து பெறப்பட்ட இந்தக் கடனுக்கான பணம், தனது வாடிக்கையாளரின் கணக்கை சென்றடையவிலலை எனவும் சட்டத்தரணி நீதிமன்றில் தெரிவித்தார்.
அரச வங்கியிடமிருந்து இந்த அளவிலான கடன்களுக்கு பொதுவாக வங்கியின் சபை மட்டத்திலான அங்கிகாரம் தேவை என்றும், ஆனால் அத்தகைய அங்கிகாரம் எதுவும் பெறப்படவில்லை என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார். மேலும், மேற்படி 90 மில்லியன் ரூபாயை யார் தவறாகப் பயன்படுத்தியது என்ற கேள்வி எழுவதாகவும் அவர் கூறினார்.
எனவே, இந்த சம்பவம் குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.



