தலைப்புச் செய்திகள்

முன்னாள் காணி உத்தியோகத்தருக்கு 22 வருடம் கடூழிய சிறைத்தண்டனை

லஞ்சம் பெற்ற குற்றத்துக்காக முன்னாள் காணி உத்தியோகத்தர் ஒருவருக்கு – கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (25) 22 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

2016 ஆம் ஆண்டு தம்புத்தேகம மகாவலி வலயத்தில் மரம் வெட்டுவதற்கான அனுமதிப்பத்திரத்தை வழங்குவதற்காக 01 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டமையை அடுத்து – இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது.

தீர்ப்பை வழங்கிய மேல் நீதிமன்ற நீதிபதி சுஜீவ நிஸ்ஸங்க – குற்றவாளிக்கு 30,000 ரூபாய் அபராதமும் விதித்ததோடு, லஞ்சச் சட்டத்தின் கீழ் – மேலதிக தண்டனையாக லஞ்சத் தொகையை வசூலிக்கவும் உத்தரவிட்டார்.

அபராதத்தை செலுத்தத் தவறினால் கூடுதலாக ஒரு வருடம் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்றும் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

அனுராதபுரத்தைச் சேர்ந்த 67 வயது குற்றவாளி, மொரட்டுவைக்கு கொண்டு செல்வதற்காக வாங்கிய மரங்களை வெட்டுவதற்கு அனுமதி கோரிய முறைப்பாட்டாளரிடம் லஞ்சம் கோரியிருந்தார். இந்த நிலையில் முறைப்பாட்டாளருக்கு 100,000 இழப்பீடு வழங்குமாறும் உத்தரவிடப்பட்டது.

மார்ச் 14, 2016 அன்று லஞ்ச ஒழிப்பு – ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் குற்றம் சாட்டப்பட்டவர் கைது செய்யப்பட்டார்.