
– நூருல் ஹுதா உமர் –
அம்பாறை மாவட்டம் – காரைதீவு பிரதேச சபையின் தவிசாளராக தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் எஸ். பாஸ்கரன் தெரிவு செய்யப்பட்டார். உப தவிசாரளராக முஸ்லிம் காங்கிரஸை சேர்ந்த எம்.எச்.எம். இஸ்மாயில் தெரிவானார்.
காரைதீவு பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் உப தவிசாளர் ஆகியோரை தெரிவு செய்யும் கூட்டம் – கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ஏ.எல்.எம். அஸ்மி தலைமையில் காரைதீவு பிரதேச சபை மண்டபத்தில் இன்று (25) மாலை நடைபெற்றது.
திறந்த முறையில் நடைபெற்ற தவிசாளர் வாக்கெடுப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் சுப்பிரமணியம் பாஸ்கரனும், தேசிய மக்கள் சக்தி சார்பில் கிருஸ்ணபிள்ளை செல்வராணியும் போட்டியிட்டனர்.
இதன்போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் முன்மொழியப்பட்ட சுப்பிரமணியம் பாஸ்கரனுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், முன்னாள் உப தவிசாளர் ஏ.எம். ஜாஹீர் ஆகியோர் சார்பாக வாக்களித்தனர்.
தேசிய மக்கள் சக்தி சார்பில் முன்மொழியப்பட்ட கிருஸ்ணபிள்ளை செல்வராணிக்கு அதே கட்சியை சேர்ந்த எஸ். சுலட்சனா வாக்களித்தார். தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் ஏ. பர்ஹாம் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை.
உப தவிசாளராக காரைதீவு பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் முஸ்லிம் காங்கிரஸை சேர்ந்த மாளிகைக்காடு எம்.எச்.எம். இஸ்மாயிலை தமிழ் தேசிய கூட்டமைப்பினர் பிரேரித்தனர். வேறு யாரும் போட்டிக்கு முன்வராதமையால் ஏகமனதாக எம்.எச்.எம். இஸ்மாயில் உப தவிசாளராக அறிவிக்கப்பட்டர்.



