தலைப்புச் செய்திகள்

பொத்துவில் பிரதேச சபையைக் கைப்பற்றும் நோக்குடன், மு.காவில் இணைந்தார் முஷாரப்

– மரைக்கார் –

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம். முஷாரப் இன்று (25) ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இணைந்து கொண்டார். இந்த நிகழ்வு சாய்ந்தமருதில் நடைபெற்றது.

முஸ்லிம் காங்கிரஸ் தலைவர்- நாடாளுமன்ற உறுப்பினர் ரஊப் ஹக்கீம் முன்னிலையில், முஸ்லிம் காங்கிரஸில் முஷாரப் இணைந்தார்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மூலம் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக 2020ஆம் ஆண்டு தெரிவு செய்யப்பட்ட முஷாரப், பின்னர் அந்தக் கட்சியின் தீர்மானங்களுக்கு மாற்றமாக செயற்பட்டு, அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கத்துடனும், பின்னர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்துடனும் இணைந்து கொண்டார்.

இந்தப் பின்னணியில், கடந்த பொதுத் தேர்தலில் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான புதிய ஜனநாயக முன்னணி கட்சியின் சிலிண்டர் சின்னத்தில் – அம்பாறை மாவட்டத்தில் போட்டியிட்ட முஷாரப் தோல்வியடைந்தார்.

இதனையடுத்து, இறுதியாக நடைபெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தலின் போது, பொத்துவில் பிரதேச சபைக்கான தேர்தலில் – அன்னாசிப் பழம் சின்னத்தைக் கொண்ட சுயேட்டைக் குழுவுக்குத் தலைமை தாங்கி முஷாரப் போட்டியிட்டார். இதில் முஷாரப் அணி, 08 ஆசனங்களைப் பெற்றுக் கொண்டது. பொத்துவில் பிரதேச சபைத் தேர்தலில் ஒரு அணி பெற்றுக் கொண்ட அதிக ஆசனம் இதுவேயாகும்.

ஆயினும் 20 ஆசனங்களைக் கொண்ட பொத்துவில் பிரதேச சபையில், தனித்து ஆட்சியமைப்பதற்கு எந்தத் தரப்பினருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.

இதன் காரணமாக, முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவைப் பெற்றுக்கொள்வதன் மூலம் – பொத்துவில் பிரதேச சபையின் ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு முஷாரப் எடுத்த முடிவின் அடிப்படையில், இன்று முஸ்லிம் காங்கிரஸுடன் முஷாரப் இணைந்து கொண்டார்.

பொத்துவில் பிரதேச சபைக்கான தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸுக்கு 05 ஆசனங்கள் கிடைத்துள்ளன.

இன்றைய நிகழ்வில், முஷாரப்பின் சுயேட்சை அணியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற உறுப்பினர்களும் முஸ்லிம் காங்கிரஸில் இணைந்து கொண்டனர்.

இது இவ்வாறிருக்க, முஸ்லிம் காங்கிரஸில் முஷாரப்பை இணைத்துக் கொள்வதற்கு, அந்தக் கட்சியின் பொத்துவில் பிரதேச முக்கியஸ்தர்களும் ஆதரவாளர்களும் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

குறிப்பாக முஸ்லிம் காங்கிரஸின் பொத்துவில் அமைப்பாளரும், பொத்துவில் பிரதேச சபையின் முன்னாள் அமைப்பாளருமான எம்.எஸ். வாசித், முஸ்லிம் காங்கிரஸில் முஷாரப் இணைவதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளதோடு, முஷாரப் கட்சியில் இணையும் இன்றைய நிகழ்விலும் பங்கேற்கவில்லை.

இதேவேளை, முஸ்லிம் காங்கிரஸில் முஷாரப் இணைந்து கொள்ளும் நிகழ்வுக்கான வரவேற்புப் பதாகையில் வாசித்தின் படம் இணைக்கப்பட்டிருந்தபோதும், இந்த நிகழ்வில் உரையாற்றிய முஷாரப், எந்த சந்தர்ப்பத்திலும் வாசித்தின் பெயரைக் குறிப்பிடவில்லை.

முஸ்லிம் காங்கிரஸுடன் முஷாரப் இணைந்து கொள்ளும் நிகழ்வில் கலந்து கலந்துகொள்வதில்லை என, முஸ்லிம் காங்கிரஸின் பொத்துவில் மத்திய குழுவும் முடிவு செய்துள்ளது.

மேலும், பொத்துவில் பிரதேச சபைக்கு முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக தெரிவு செய்ய்பபட்ட உறுப்பினர்களையும் – மேற்படி நிகழ்வுக்குச் செல்ல வேண்டாம் என, பொத்துவில் பிரதேச முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்கள் வலியுறுத்தியதாக அறிய முடிகிறது.