தலைப்புச் செய்திகள்

ஈரான் – இஸ்ரேல் போர் நிறுத்தம் எட்டப்பட்டுள்ளதாக ட்ரம்ப் அறிவிப்பு: இப்போதைக்கு எந்த உடன்பாடும் இல்லை என்கிறது ஈரான்

ஈரானும் இஸ்ரேலும் முழுமையான போர்நிறுத்தத்திற்கு ஒப்புக் கொண்டுள்ளதாகவும், வரும் மணிநேரங்களில், அது நடைமுறைக்கு வரும் என்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

கட்டாரிலுள்ள – அமெரிக்காவின் அல் உதெய்த் விமானப்படை தளத்தின் மீது – ஈரானிய ஏவுகணைத் தாக்குதலுக்குப் பிறகு, ட்ரம்ப் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

‘எல்லாம் சரியாக நடக்கும் என்ற அனுமானத்தின் அடிப்படையில், ’12 நாள் போர்’ முடிவுக்குக் கொண்டுவரப்பட்டமைக்கு – இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய இரு நாடுகளையும் நான் வாழ்த்த விரும்புகிறேன்’ என்று ட்ரம்ப் ஒரு சமூக ஊடகப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

‘இது பல ஆண்டுகளாக நீடித்து, முழு மத்திய கிழக்கையும் அழித்திருக்கக்கூடிய ஒரு போர், ஆனால் அது நடக்கவில்லை, ஒருபோதும் நடக்காது. கடவுள் இஸ்ரேலை ஆசீர்வதிப்பாராக, கடவுள் ஈரானை ஆசீர்வதிப்பாராக, கடவுள் மத்திய கிழக்கை ஆசீர்வதிப்பாராக, கடவுள் அமெரிக்காவை ஆசீர்வதிப்பாராக, கடவுள் உலகை ஆசீர்வதிப்பாராக’ எனவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

இஸ்ரேல் ராணுவம் தனது நடவடிக்கைகளை முடிப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்துவதை ஈரான் நிறுத்தும் என்றும் அந்தப் பதிவில் மேலும் தெரிவித்துள்ளார்.

இது இவ்வாறிருக்க, ஈரானில் இஸ்ரேல் தனது தாக்குதல் நடவடிக்கைகளைத் தொடர்ந்து வருவதாக செய்திகள் கூறுகின்றன.

இந்த யுத்த நிறுத்தம் குறித்து ஈரானிய வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அரக்ச்சி தெரிவிக்கையில்; இப்போதைக்கு போர் நிறுத்தம் அல்லது ராணுவ நடவடிக்கைகளை நிறுத்துவது குறித்து எந்த உடன்பாடும் இல்லை என, சமூக ஊடகப் பதிவொன்றில் குறிப்பிட்டுள்ளார்.

தெஹ்ரான் நேரப்படி அதிகாலை 4.00 மணிக்குள் இஸ்ரேல் தனது தாக்குதலை நிறுத்தினால், அதன் பிறகு எங்கள் பதிலடியைத் தொடர, எங்களுக்கு எந்த நோக்கமும் இல்லை எனவும் அவர் தெரிவித்திருக்கிறார்.