
முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் அடுக்குமாடி வீட்டுக்கான வாடகையை, பிணை முறி மோசடி வழக்கின் சந்தேக நபர்களில் ஒருவரான அர்ஜுன் அலோசியஸ் செலுத்தியதாக தொடரப்பட்ட லஞ்ச வழக்குக்கு எதிராக, ரவி கருணாநாயக்க தாக்கல் செய்த மேல்முறையீட்டை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்றத்தில் லஞ்ச, ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு தாக்கல் செய்த வழக்கை எதிர்த்து – ரவி கருணாநாயக்க உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.
நிதியமைச்சராக இருந்த காலத்தில், ரவி கருணாநாயக்க ஒரு சொகுசு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார். அதற்கான வாடகையை பெர்பெச்சுவல் ட்ரெஷரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் (பின்னர் இவர் பிணைமுறி மோசடி வழக்கின் சந்தேக நபராக பெயரிடப்பட்டார்) அர்ஜுன் அலோசியஸ் செலுத்தியதாக வழக்கத் தாக்கல் செய்யப்பட்டது.
அடுக்குமாடி குடியிருப்பின் மாதாந்த வாடகை 1.45 மில்லியன் ரூபாய் என்றும், ரவி கருணாநாயக்க சார்பாக அலோசியஸ் 08 மாத வாடகையை செலுத்தியதாகவும் கூறப்படுகிறது.
இதன் அடிப்படையில், கொழும்பு மேல் நீதிமன்றத்தில் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக – லஞ்ச, ஊழல் ஆணைக்குழு குற்றப்பத்திரிகைகளை தாக்கல் செய்தது.
இந்தப் பின்னணியில், லஞ்ச ஒழிப்பு சட்டத்தின் கீழ் – அமைச்சருக்கு ஒருவருக்கு எதிராக வழக்கு தொடர முடியாது என்று, ரவி கருணாநாயக்கவின் சட்டக் குழு வாதிட்டது. இருப்பினும், மேல் நீதிமன்றம் அந்த வாதத்தை நிராகரித்தது.
பின்னர் கருணாநாயக்க மேல் நீதிமன்றத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். ஆனால் உச்ச நீதிமன்றம் இப்போது அவரது மனுவை நிராகரித்துள்ளது.
மேல் நீதிமன்றம் – ஒருவரை குற்றவாளி என்று தீர்ப்பளித்தால் மட்டுமே, அதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய முடியும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.



