தலைப்புச் செய்திகள்

சிங்கப்பூரில் கொவிட் – 19 தொற்று காரணமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரிப்பு

சிங்கப்பூரில் ஆண்டு முழுவதும் அவ்வப்போது கொவிட் – 19 தொற்று ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அந்த நாட்டு சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் அந்தத் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டவர்கள் அண்மையில் அதிகரித்து வருவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

ஏப்ரல் 27 முதல் மே 3 வரையிலான வாரத்தில் கொவிட் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 14,200 ஆக உயர்ந்துள்ளது. இது முந்தைய வாரத்தில் 11,100 எனும் எண்ணிக்கையாக இருந்தது.

“அதே காலகட்டத்தில், சராசரி தினசரி கொவிட் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டு வைத்தியசாலைகளில் சேர்க்கப்படுபவர்களின் எண்ணிக்கை 102 இலிருந்து 133 ஆக உயர்ந்தது. ஆனால் சராசரி தினசரி தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்படுபவர்களின் எண்ணிக்கை மூன்றிலிருந்து இரண்டாகக் குறைந்துள்ளன” என்று சுகாதார அமைச்சு மற்றும் தொற்று நோய்கள் நிறுவகம் ஆகியவை இன்று செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

சிங்கப்பூரின் வைத்தியசாலைகள் தற்போது – கொவிட் நோயாளிகளின் அதிகரிப்பைக் கையாளும் நிலையில் உள்ளன என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

“பிற உள்ளூர் சுவாச நோய்களைப் போலவே, ஆண்டு முழுவதும் அவ்வப்போது கொவிட் 19 தொற்றும் எதிர்பார்க்கப்படுகின்றன,” என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

பூஸ்டர் தடுப்பூசி ஏற்றிக் கொள்ளும் விகிதம் குறைவது, நோய்த் தொற்று அதிகரிப்பதற்கு ஒரு முக்கிய காரணம் என்றும், இதனால் நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமடைவதாகவும் வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.