தலைப்புச் செய்திகள்

கொத்மலை பஸ் விபத்து: சிகிச்சை பெறுவோரையும் குடும்பத்தினரையும் பிரதமர் சந்தித்தார்

கொத்மலை – கெரண்டி எல்ல பகுதியில் நடந்த பஸ் விபத்தையடுத்து, கம்பளை மற்றும் பேராதனை வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவோரை, பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க ஆகியோர் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு பார்வையிட்டனர்.

காயமடைந்தவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரை சந்திப்பதற்காக, பிரதியமைச்சர் டொக்டர் பிரசன்ன குணசேனவும் இந்த விஜயத்தில் இணைந்து கொண்டார்.

“ஒரு உயிரை இழந்தாலும் அது ஒரு சோகம்தான். ஒவ்வொரு நபரும் ஒருவரின் குடும்ப உறுப்பினர்” என்று பிரதமர் அமரசூரிய இதன்போது ஊடகங்களிடம் தெரிவித்தார்.

“வாகன விபத்துக்கள் ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து உயிர்களைக் காவுகொள்கின்றன. இது ஒரு பிரச்சினையாக மாறி வருவதை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம்” என்றும் அவர் கூறினார். மேலும் போக்குவரத்து அமைச்சர் இந்த விஷயத்தை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுத்துள்ளார் என்றும் அவர் குறிப்பிட்டார்.

கடினமான சூழ்நிலைகளின் போதும் வைத்தியயர்கள் மற்றும் அவசரகால ஊழியர்களுக்கு செய்து வரும் சேவைகளுக்கும் பிரதமர் நன்றி தெரிவித்தார்.

விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது, குறைந்தது 35 பேர் காயமடைந்துள்ளனர். கதிர்காமத்திலிருந்து குருநாகலுக்குச் சென்ற தனியார் பேருந்து ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சாலையை விட்டு விலகி பள்ளத்தாக்கில் விழுந்ததில் விபத்து ஏற்பட்டது.

நேற்றை பஸ் விபத்தில் 22 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் மரணமடைந்த ஒவ்வொருவரின் குடும்பத்துக்கும் 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்குமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இந்த விபத்தில் 45 பேர் காயமடைந்து, வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.