தலைப்புச் செய்திகள்

போக்குரவத்து சபையின் 55 டிப்போக்கள் நட்டத்தில் இயங்குகின்றன: அமைச்சர் பிமல் தெரிவிப்பு

லங்கை போக்குவரத்து சபையின் 55 டிப்போக்கள் தற்போது நட்டத்தில் இயங்கி வருவதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று (08) உரையாற்றிய அவர்; 54 SLTB டிப்போக்கள் மட்டுமே செயல்பாடுகள் மூலம் லாபம் ஈட்டுவதாகக் கூறினார்.

நட்டத்தில் இயங்கும் 55 டிப்போக்களுக்கு – புதிய நடவடிக்கைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க குறிப்பிட்டார்.

இந்த நடவடிக்கைகளில் திறமையற்ற முகாமையாளர்களின் இடத்துக்கு திறமையான முகாமையாளரை மாற்றுதல், பஸ் அட்டவணைகளை திருத்துதல், பஸ் பயணங்களின் எண்ணிக்கையை அதிகரித்தல், பயணிகளுக்கு அறிவூட்டல் வழங்குவதன் மூலம் மோசடி நடவடிக்கைகளைக் குறைத்தல், ஊழியர்களை ஊக்குவிக்க ஊழியர்களின் சம்பளத்தை திருத்துதல், தொழிலாளர்களுக்கு பயிற்சி பட்டறைகளை ஏற்பாடு செய்தல், ஒவ்வொரு டிப்போவுக்கும் தினசரி இலக்குகளை நிர்ணயித்தல், பஸ்களில் எரிபொருள் நிர்வாகத்தை மேம்படுத்துதல், விநியோகங்களின் தரத்தை தொடர்ந்து ஆய்வு செய்தல், டிப்போ செலவுகளைக் கட்டுப்படுத்த தெளிவான வழிகாட்டுதல்களை வழங்குதல், எதிர்கால நடவடிக்கைகளைத் திட்டமிட மாதாந்த நிதிக் கணக்குகளை மதிப்பாய்வு செய்தல் மற்றும் டிப்போக்களில் கூடுதல் வருமானம் ஈட்டும் செயல்பாடுகளை ஆராய்தல் ஆகியவை அடங்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

SLTB 7,137 பேருந்துகளைக் கொண்டுள்ளது, ஆனால் அவற்றில் 5,182 மட்டுமே தற்போது செயல்பாட்டில் உள்ளன என்று அமைச்சர் மேலும் கூறினார். அதன்படி, SLTB-க்குச் சொந்தமான 1,955 பேருந்துகள் தற்போது சேவையில் இல்லை.

SLTB தற்போது மொத்தம் 25,384 பேரைப் பணியமர்த்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.