தலைப்புச் செய்திகள்

தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பதவிக்கு மூவரின் பெயர்கள் பரிந்துரைப்பு

தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பதவிக்கு – மூன்று பேரை, பல்கலைக்கழக பேரவை பரிந்துரை செய்துள்ளது.

உபவேந்தர் பதவிக்கு மூன்று நபர்களை பரிந்துரை செய்வதற்கான விஷேட பேரவை ஒன்றுகூடல், இன்று (03) பேராசிரியர் எம்.எம். பாஸில் தலைமையில் தென்கிழக்கு பல்கலைக்கழக கூட்டமண்டபத்தில் இடம்பெற்றது.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் 03/2023ஆம் இலக்க சுற்றுநிருபத்தில் கோரப்பட்டுள்ளத்தன் அடிப்படையில் – விண்ணப்பதாரிகளுக்கு ஏழு அளவுகோல்களின் (Criteria) கீழ் பேரவை உறுப்பினர்கள் புள்ளிகள் இட்டு, அதிகூடிய புள்ளிகள் பெற்ற மூவரை தெரிவு செய்தனர்.

இதன் அடிப்படையில் முதலாவதாக பேராசிரியர் எஸ்.எம். ஜுனைடீன், இரண்டாவதாக பேராசிரியர் ஏ.எம். றஸ்மி மூன்றாவதாக கலாநிதி யூ.எல். செயினுடீன் ஆகியோர் அதிக புள்ளிகள் அடிப்படையில் பேரவையால் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தராக பணியாற்றிய பேராசிரியர் றமீஸ் அபூபக்கரின் முதலாவது பதவிக்காலம் கடந்த 2024.08.09ஆம் திகதியுடன் நிறைவடைந்த நிலையில், குறித்த வெற்றிடத்தை நிரப்புவதற்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் சுற்றுநிருபத்துக்கமைய பல்கலைக்கழக பேரவையின் சார்பில் பதில் பதிவாளர் எம்.ஐ.எம். நௌபர் – விண்ணப்பங்களுக்கான அழைப்பை கடந்த 2024.02.08 ஆம் திகதி விடுத்திருந்தார்.

அதன் அடிப்படையில் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர், பேராசிரியர் எப். ஹன்ஸியா றவூப், பேராசிரியர் ஏ.எம். றஸ்மி, பேராசிரியர் எஸ்.எம். ஜுனைடீன், பேராசிரியர் எம்.வி.எம். இஸ்மாயில், பேராசிரியர் ஏ.எம். முஸாதிக் மற்றும் கலாநிதி ஏ.சி.எம். ஹனஸ் உள்ளிட்ட ஏழுபேர் விண்ணப்பித்திருந்தனர்.

இவர்களில் இருந்து அப்போதைய பேரவை – பேராசிரியர் றமீஸ் அபூபக்கர், பேராசிரியர் ஏ.எம். றஸ்மி பேராசிரியர் எப். ஹன்ஸியா றவூப் ஆகியோரை ஜனாதிபதிக்கு சிபார்சு செய்திருந்ததது.

இருந்தபோதும் அரசியல் மாற்றம் உள்ளிட்ட காரணங்களால் அந்தப் பரிந்துரையை ஜனாதிபதி அனுர குமார திசாநாக்க நிராகரிந்திருந்தார்.

இந்த நிலையில் பதில் உபவேந்தராக கலாநிதி யூ.எல். அப்துல் மஜீத் நியமிக்கப்பட்டார்.

பின்னர் மீண்டும் குறித்த வெற்றிடத்தை நிரப்புவதற்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் சுற்றுநிருபத்துக்கமைய பல்கலைக்கழக பேரவையின் சார்பில் பதில் பதிவாளர் எம்.ஐ. நௌபர் விண்ணப்பங்களுக்கான அழைப்பை கடந்த பெப்ரவரி 06ஆம் திகதி விடுத்திருந்தார்.

அதற்கமைய மார்ச் 06 ஆம் திகதி, 3.00 மணிவரை – கலாநிதி யூ.எல். அப்துல் மஜீத், பேராசிரியர் றமீஸ் அபூபக்கர், பேராசிரியர் ஏ.எம். றஸ்மி, பேராசிரியர் எம்.ஐ.எஸ். சபீனா, பேராசிரியர் எஸ்.எம். ஜுனைடீன், பேராசிரியர் எப். ஹன்ஸியா றவூப், பேராசிரியர் ஏ.எம். முஸாதிக், பேராசிரியர் ஏ.ஜௌபர் மற்றும் கலாநிதி யூ.எல். செயினுடீன் உள்ளிட்ட ஒன்பதுபேர் விண்ணப்பித்திருந்தனர்.

தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பதவிக்கு இம்முறையும் தென்கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மாத்திரமே விண்ணப்பித்திருந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பல்கலைக்கழக பேரவையினால் இன்று பரிந்துரைக்கப்பட்ட மூவரில் ஒருவரை ஜனாதிபதி உபவேந்தராக நியமிப்பார்.