
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்ற உறுப்பினரக வரவுள்ளார் என பரவும் கதைகளை நிராகரித்துள்ளார். மேலும், அத்தகைய நோக்கம் தனக்கு இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ரணில் விக்ரமசிங்க மீண்டும் நாடாளுமன்றம் செல்லவுள்ளார் என பரவிவரும் பேச்சுகள் குறித்து, அவரிடம் ஊடகவியலாளர்கள் கேட்டபோது; “ஃபெராரி (Ferrari) வாகனம் ஓட்டுவதற்கான அனுமதிப்பத்திரம உள்ள ஒருவர், எல்-போர்ட் (L-Board) சாரதிகளுடன் நேரத்தை செலவிட மாட்டார்” என்று பதிலளித்தார்.
புதிய ஜனநாயக முன்னணியின் கொழும்பு அலுவலகத்தில் இளம் சட்டத்தரணிகள் கூட்டத்தைத் தொடர்ந்து – ஊடகவியலாளர்களிடம் அவர் பேசினார்.
எல்-போர்டு எம்.பி.யாக வேண்டியதில்லை எனும் தனது முடிவை ஐ.தே.க. செயற்குழுவிடம் ஏற்கனவே தான் தெரிவித்து விட்டதாகவும் ரணில் விக்கிரமசிங்க இதன்போது குறிப்பிட்டார்.
தனது பதவிக் காலத்தைப் பற்றி சிந்தித்துப் பார்க்கும்போது, பொருளாதார நெருக்கடியின் போது நாட்டை வழிநடத்தியதில் ஏற்பட்ட சவால்களைக் கையாண்டதில் அமைதியான திருப்தி ஏற்பட்டதாக அவர் மேலும் கூறினார்.
மக்கள் நாட்டின் பொறுப்பை ஒரு புதிய தலைமையிடம் ஒப்படைத்ததால், இப்போது அவர்களின் கடமைகளை முறையாக நிறைவேற்றுவது அவர்களின் கடமை என்றும் அவர் வலியுறுத்தினார்.



