தலைப்புச் செய்திகள்

செவ்வந்தியுடன் தொடர்பு வைத்திருந்த பொலிஸ் உத்தியோகத்தருக்கு விளக்க மறியல்

பாதாள உலகத் தலைவன் கணேமுல்ல சஞ்சீவவின் கொலை விசாரணைகள் தொடர்பாக கைது செய்யப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தரை மார்ச் 07ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், துப்பாக்கிச் சூடு நடத்திய பிரதான சந்தேக நபர் தப்பிப்பதற்கு உதவிய வாகனத்தின் சாரதியை தடுத்து வைத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புதுக்கடை நீதிமன்ற வளாகத்திற்குள் நடந்த கணேமுல்ல சஞ்சீவ கொலை தொடர்பாக தேடப்படும் பெண் சந்தேக நபரான இஷாரா செவ்வந்தியுடன் தொடர்பு இருப்பதாகக் கூறப்படும் – நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் நேற்று (20) கைது செய்யப்பட்டார்.

பதேனியாவைச் சேர்ந்த 25 வயது பயிற்சி பொலிஸ் கொன்ஸ்டபில் ஒருவரே இவ்வாறு கைதானார். அவர் நீர்கொழும்பு பொலிஸ் குற்றப் பிரிவின் கீழ், நீதிமன்றப் பணியில் நியமிக்கப்பட்டார். விசாரணைகளைத் தொடர்ந்து கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவால் அவர் கைது செய்யப்பட்டார்.

நேற்று நடந்த கொலைச் சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியை நீதிமன்ற வளாகத்திற்குள் முக்கிய சந்தேக நபரிடம் ஒப்படைத்ததாக நம்பப்படும் பெண் சந்தேக நபருடன் – கைது செய்யப்பட்ட பொலிஸ் கொன்ஸ்டபில் தொலைபேசியில் பேசியதாக கண்டறியப்பட்டுள்ளது.

சந்தேகத்திற்குரிய கொன்ஸ்டபில் ஆரம்பத்தில் விசாரிக்கப்பட்டு, பின்னர் மேலதிக விசாரணைகளுக்காக கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

தொடர்பான செய்தி: கனேமுல்ல சஞ்சீவ கொலை: செவ்வந்திக்கு உதவிய பொலிஸ் உத்தியோகத்தர் கைது