
– பாறுக் ஷிஹான் –
கேரளக் கஞ்சாவுடன் கைதான பிரபல வியாபாரிகள் இருவரை எதிர்வரும் 11ஆந் திகதி வரை தடுப்புக்காவலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.
நேற்று புதன்கிழமை (5) கல்முனை விசேட அதிரடிப்படையினரால் பெருந்தொகையான கேரளக் கஞ்சாவுடன் கைது செய்யப்படட 02 பிரபல வியாபாரிகள், இன்று (06) நீதிமன்றில் ஆஜர்செய்யப்பட்டபோது, அவர்களை எதிர்வரும்11ஆந் திகதி வரை தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்யுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
பெருந்தொகையான கேரளக் கஞ்சாவுடன் 02 பிரபல வியாபாரிகள் – கல்முனை விசேட அதிரடிப் படையினரினால் நேற்று கைது செய்யப்பட்டனர்.
கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதியில் மறைந்திருந்த ஒரு சந்தேக நபரும், பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அக்பர் கிராமம் சனசமூக வீதி முன்பாக உள்ள இடத்தில் மறைந்திருந்த மற்றுமொரு சந்தேக நபரும் கைதாகினர்.
கல்முனை விசேட அதிரடிப் படையினரின் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலுக்கமைய தேடுதல் மேற்கொண்ட போது, இவ்விரு சந்தேக நபர்களும் பெருந்தொகையான கேரளா கஞ்சா மற்றும் ஒரு தொகை பணத்துடன், இரு வேறு சந்தர்ப்பங்களில் புதன்கிழமை (5) அதிகாலை கைது செய்யப்பட்டனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 54 மற்றும் 62 வயது மதிக்கத்தக்கவர்கள் என்பதுடன் – நீண்ட காலமாக கல்முனை, சாய்ந்தமருது, மருதமுனை, நற்பிட்டிமுனை, உள்ளிட்ட பகுதிகளில் – கேரளா கஞ்சாவினை விற்பனை செய்தும் விநியோகித்தும் வந்துள்ளதாக கல்முனை விசேட அதிரடிப்படையினர் தெரிவித்தனர்.
கைதான இருவரில் 07 கிலோ கேரளா கஞ்சாவினை வைத்திருந்தவர், பெரிய நீலாவணை அக்பர் வீதியை சேர்ந்த கைக்கடிகாரம் திருத்தும் நபராவார். 04 கிலோ கேரளா கஞ்சாவினை வைத்திருந்த மற்றைய சந்தேக நபர் – கல்முனை நகரில் அமைந்துள்ள பிரபல ஆடை விற்பனை நிலையத்தை நடத்தி வருகின்றார்.
சந்தேக நபர்கள் வசம் இருந்து பெருமளவான கேரளா கஞ்சா பொதிகள், ஒரு மோட்டார் சைக்கிள், 05 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் பண நோட்டுக்கள் என்பன மீட்கப்பட்டன.
இதையும் பாருங்கள்



