
– தில்சாத் பர்வீஸ் –
மாமனார் – மருமகன் இடையே ஏற்பட்ட கைகலப்பில், மாமனார் ஸ்தலத்தில் மரணமடைந்த சம்பவமொன்று சம்மாந்துறையில் நடந்துள்ளது.
நேற்று (29.01.2025) புதன்கிழமை இரவு வேளையில் இந்த சம்பவம் இடம்பெற்றதாக தெரியவருகிறது.
அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தென்னம்பிள்ளை கிராமம் பகுதியில் நேற்று (29) புதன்கிழமை இரவு வேளையில் மாமனார் – மருமகன் இடையே கைகலப்பு நடந்தது.
பொலிஸாரின் ஆரம்பக் கட்ட விசாரணையில், குடும்ப பிரச்சினை காரணமாக இருவருக்கும் இடையில் கைகலப்பு நடந்துள்ளதாக தெரியவருகிறது.
இச்சம்பவம் சம்மாந்துறை தென்னம்பிள்ளை கிராமத்தில் அமைந்துள்ள, இறந்தவரின் மகளின் வாடகை வீட்டு முற்றத்தில் இடம்பெற்றுள்ளது.
மத்திய வீதி, மலையடிக்கிராமம் 01 எனும் இடத்தைச் சேர்ந்த, 55 வயது நபரே சம்பவத்தில் மரணமடைந்துள்ளார்.
மாமனார் – மருமகன் இடையே நடந்த கைகலப்பின் போது, மாமனார் தாக்கப்பட்டு மரணமடைந்தாரா அல்லது மாரடைப்பு காரணமாக மரணமடைந்தாரா என்பது தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதே வேளை, சம்பவத்தில் சந்தேக நபரான ஆலிம் சேனை 02, மூதூர் பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய மருமகனை சம்மாந்துறைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைகலப்பில் மரணமடைந்தவரின் சடலம் பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என பொலிஸார் தெரிவித்தனர்.
இதையும் பாருங்கள்



