
ஆடு ஒன்றைக் கடித்த நாயை தூக்கிலிடும் தீர்ப்பை முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள ஒட்டுசுட்டான் பிரதேச மத்தியஸ்த சபை வழங்கியுள்ளதாக விலங்கு நல அமைப்பு (The Animal Welfare Coalition) இன்று (26) தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயகாரவுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக விலங்கு நல அமைப்பின் நிர்வாகக் குழு உறுப்பினர் டொக்டர் சமித் நாணயக்கார டெய்லி மிரருக்கு பத்திரிகைக்குத் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்று சனிக்கிழமை (25) நடந்துள்ளது. இரு குழுக்களுக்கிடையிலான மோதலுக்கு தீர்வாக ஒட்டுசுட்டானில் உள்ள மத்தியஸ்த சபை – நாயை தூக்கிலிட உத்தரவு பிறப்பித்ததாக கூறப்படுகிறது.
ஒரு குடும்பத்தினரின் நாய் மற்றொரு குடும்பத்திற்குச் சொந்தமான ஆட்டை கடித்ததால் – இரு குடும்பங்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக தெரிய வருகிறது.
இந்த வழக்கு மத்தியஸ்த சபையின் முன் கொண்டுவரப்பட்ட போது, அங்கிருந்த மூன்று மத்தியஸ்தர்கள் – நாயை தூக்கிலிட முடிவு செய்துள்ளனர். அதன்படி நாயை தூக்கிலிடுமாறு அதன் உரிமையாளர்களுக்கு மத்தியஸ்த சபை உத்தரவிட்டதோடு, அதனை நிரூபிப்பதற்கான படத்தை ஆதாரமாக வழங்குமாறும் மத்தியஸ்த சபை உத்தரவிட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் இந்த உத்தரவின் பேரில் செயல்பட்டு, நாயைத் தூக்கிலிடும் மனிதாபிமானமற்ற செயலைச் செய்ததாக டொக்டர் சமித் நாணயக்கார தெரிவித்துள்ளார்.
“இதுபோன்ற உத்தரவும் அதைத் தொடர்ந்து வந்த நடவடிக்கையும் மிகவும் கவலையளிக்கிறது. இதற்கு முன்பு இதுபோன்ற கொடூரமான உத்தரவை நாங்கள் சந்தித்ததில்லை” என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்த சம்பவம் சமூக ஊடகங்களில் பரவலாகப் பரவியுள்ளது.
இத்தகைய உத்தரவை பிறப்பிப்பது தார்மீக மற்றும் சட்டக் கொள்கைகளை மீறுவதாக விலங்கு நல அமைப்பு குறிப்பிட்டுள்ளது. இது இந்த நாட்டின் சட்டங்களின் உணர்வு மற்றும் விதிகளுக்கு நேரடியாக முரணானது எனவும் தெரிவித்துள்ளது.
நீதி நிலைநாட்டப்படுவதை உறுதிசெய்யவும், இதுபோன்ற கொடூரமான செயல்கள் மீண்டும் நிகழாமல் தடுக்கவும் உடனடியாக தலையிடுமாறு நீதியமைச்சரை விலங்கு நல அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

இதையும் பாருங்கள்



