தலைப்புச் செய்திகள்

யோஷித ராஜபக்ஷவுக்கு வெளிநாட்டு பயணத் தடையுடன் பிணை

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷ, நேற்று முன்தினம் சனிக்கிழமை கைது செய்யப்பட்டு – நீதிமன்ற உத்தரவுக்கிணங்க, விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், அவரை பிணையில் விடுவிக்குமாறு இன்று (27) நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் யோஷித ராஜபக்ஷ ஆஜர்படுத்தப்பட்ட போது, அவரை தலா 50 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் மஞ்சுள ரத்நாயக்க உத்தரவிட்டார்.

இதன்போது யோஷித ராஜபக்ஷவுக்கு வெளிநாட்டு பயணத் தடையையும் நீதிமன்றம் விதித்தது. இது தொடர்பாக குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு அறிவிக்குமாறும் நீதவான் உத்தரவிட்டார்.

மேலும், யோஷித ராஜபக்ஷ ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில், நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜராக வேண்டும் என்றும், வழக்கு தொடர்பான எந்தவொரு சாட்சி மீதும் செல்வாக்கு செலுத்தக் கூடாது எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந் நிலையில், யோஷித ராஜபக்ஷவை விளக்கமறியலில் வைப்பதற்குப் போதுமான, திருப்திகரமான ஆதாரங்களை – அரச தரப்பு சமர்ப்பிக்கத் தவறியதால், பிணைச் சட்ட விதிகளின்படி சந்தேக நபரை பிணையில் விடுவிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

யோஷித ராஜபக்ஷவை 34 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள காணி வழக்கில் பிரதிவாதியாக பெயரிட போதுமான ஆதாரங்கள் இருப்பதாகக் கூறி, சிஐடிக்கு சட்ட மா அதிபர் அறிவித்ததை அடுத்து, அவர் கைது செய்யப்பட்டார்.

நிலுவையிலுள்ள இந்த வழக்கின் முதலாவது சந்தேக நபர் – யோஷித ராஜபக்ஷவின் பாட்டி டெய்சி ஃபாரஸ்ட் ஆவார்.

குறித்த வழக்கில் – பணத் தூய்மையாக்கல் சட்டத்தின் கீழ், யோசிஷ ராஜபக்ஷ சந்தேக நபராகக் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதையும் பாருங்க