
நாடு முழுவதுமுள்ள முஸ்லிம்கள் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு வாக்களிக்கவில்லை என்றும், தேசிய மக்கள் சக்திக்கே வாக்களித்தார்கன் எனவும், அமைச்சர் பிமல் ரத்நாயக்க நாடாளுமன்றில் தெரிவித்தார்.
முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீமை விமர்சித்து பேசும் போது – அவர் இதனைக் கூறினார்.
இலங்கையில் முஸ்லிம்களிடையே பெரும்பான்மை ஆதரவை கொண்டுள்ளது முஸ்லிம் காங்கிரஸ் அல்ல என்றும், தேசிய மக்கள் சக்திக்கே நாட்டில் முஸ்லிம்கள் அதிகளவு வாக்களித்துள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீமை இன்று (23) நாடாளுமன்றில் விமர்சித்த அமைச்சர் பிமல் ரத்நாயக்க, சமீபத்தில் படகு மூலம் இலங்கையை அடைந்த ரோஹிங்கியா அகதிகள் வருகையை அரசியலாக்க வேண்டாம் என்று வலியுறுத்தினார்.
இலங்கை மற்றும் சர்வதேச சட்டங்களின்படி – அரசாங்கம் இந்த விடயத்தை மனிதாபிமான முறையில் கையாளும் என்று கூறிய பிமல் ரத்நாயக்க, அகதிகள் மியான்மருக்கு நாடு கடத்தப்படுவார்கள் என்ற குற்றச்சாட்டுகளை நிராகரித்தார், மேலும் அத்தகைய முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
“இந்த மக்கள் இரக்கத்துடனும் சட்டத்தின் கட்டமைப்பிற்குள்ளும் நடத்தப்படுவதை அரசாங்கம் உறுதி செய்யும். இந்த சூழ்நிலையை அரசியல் ஆதாயத்திற்காக எதிர்க்கட்சிகள் பயன்படுத்த வேண்டாம் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்,” எனவும் அவர் கூறினார்.
இதையும் பாருங்கள்



