
யாழ்ப்பாணத்திலுள்ள நகைக்கடை உரிமையாளர் ஒருவரிடமிருந்து 03 மில்லியன் ரூபாய் பணத்தை மிரட்டி பறித்த குற்றச்சாட்டில், இலங்கை ராணுவ சிறப்புப் படையைச் சேர்ந்த இருவரும் காப்புறுதி நிறுவனத்தின் மாவட்ட முகாமையாளர் உட்பட இரண்டு பேரும் – நேற்று (18) யாழ்ப்பாணப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
39 முதல் 50 வயதுக்குட்பட்ட சந்தேக நபர்கள் மஹையாவ, கட்டுகஸ்தோட்டை, பத்தேகம மற்றும் மனிகின்ன ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர். சந்தேக நபரிடமிருந்து சுமார் 02 மில்லியன் ரூபாயை பொலிஸார் மீட்டுள்ளனர்.
இம்மாதம் 16 ஆம் திகதி, பயங்கரவாத புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் என்று கூறி, சந்தேக நபர்கள் – யாழ்ப்பாணத்தின் கஸ்தூரியா பகுதியில் உள்ள தங்க நகைக் கடைக்குள் நுழைந்ததாகக் கூறப்படுகிறது.
அவர்கள் போலியான பிடியாணையைக் காட்டி, புலிகளால் கொள்ளையடிக்கப்பட்ட தங்கத்தை நகைக்கடை உரிமையாளர் வைத்திருப்பதாக, உரிமையாளரிடம் கூறியுள்ளனர்.
பின்னர், உரிமையாளரிடம் 03 மில்லியன் ரூபாய் பணம் வழங்குமாறு வற்புறுத்தி, தங்கத்தை நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காக – கொழும்புக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று கூறி, சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
இதையும் பாருங்கள்



