
ஜனாதிபதி ஊடகப் பிரிவிலிருந்து கடந்த காலங்களில் 162 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் காணாமல் போனமை தொடர்பில், விரிவான விசாரணையை நடத்தி நீதிமன்றத்தில் உண்மைகளை முன்வைக்குமாறு கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுர குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு (சிடிடி) உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணையைத் தொடங்கியுள்ளதாகவும், விசாரணையின் முன்னேற்றம் குறித்து நீதிமன்றத்திற்கு விளக்க நடவடிக்கை எடுப்பதாகவும் – நீதிமன்றத்திற்கு சிஐடி தெரிவித்ததை அடுத்து நேற்று (09) இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இது தொடர்பாக கொள்முதல் அதிகாரியிடமிருந்து ஏற்கனவே ஒரு அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளதாக – நீதிமன்றத்திற்குத் தெரிவித்த சிஐடி, பொருட்களைப் பெற்றவர்களிடமிருந்து வாக்குமூலங்களைப் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளது.
காணாமல் போனதாகப் புகாரளிக்கப்பட்ட பொருட்களைக் கண்டறிய விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாகவும் சிஐடி மேலும் தெரிவித்துள்ளது.
காணாமல் போனதாகப் புகாரளிக்கப்பட்ட பொருட்களின் பட்டியல் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.



