தலைப்புச் செய்திகள்

ஊடகவியலாளர் மீது தாக்குதல் நடத்திய 06 பேர் கைது

– பாறுக் ஷிஹான் –

சட்டவிரோத மணல்அகழ்வு தொடர்பான செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளரை தாக்கிய 06 சந்தேக நபர்களை  சம்மாந்துறை பொலிஸார் நேற்று (02) கைது செய்தனர்.

 விவசாயிகளிடமிருந்து கிடைத்த தகவலை அடுத்து –  சட்டவிரோதமாக மணல் அகழ்வு இடம்பெறும் பகுதிக்கு செய்தி சேகரிக்க சென்ற  ஊடகவியலாளர் அச்சல உபேந்திர மீது, இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டது.

தாக்குதலுக்குள்ளான ஊடகவியலாளரின் புகைப்படகருவி, தொலைபேசி மற்றும் ட்ரோன் கமெரா ஆகியவற்றை – சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட சந்தேக நபர்கள் அபகரித்ததாக, இறக்காமம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.

இம்முறைப்பாட்டிற்கமைய – சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.எஸ். ஜெயலத் வழிகாட்டுதலில், பொலிஸ் நிலைய பெருங்குற்றப் பிரிவு பொறுப்பதிகாரி கே. சதீஸ்கர் தலைமையிலான குழுவினர் செயற்பட்டு, ஊடகவியலாளர் வசமிருந்து சந்தேக நபர்கள் அபகரித்துச் சென்ற ட்ரோன் கமெரா, புகைப்படகருவி மற்றும் தொலைபேசிகள் மீட்கப்பட்டன.

அத்துடன் 06 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதோடு, மோட்டார் சைக்கிள், மணல் அகழ்வில் ஈடுபட்ட வாகனம் என்பன மீட்கப்பட்டுள்ளன.

தாக்குதலுக்குள்ளான குறித்த ஊடகவியலாளர் – அம்பாறை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று, வீடு திரும்பியுள்ளார்.

சந்தேக நபர்கள் இன்று (03) அம்பாறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.