தலைப்புச் செய்திகள்

“தேர்தல் முடிவுகளை ஏற்கவில்லை”: இரண்டாவது இடத்தில் அதாஉல்லா முறைப்பாடு

– நூருல் ஹுதா உமர் –

கடந்த பொதுத் தேர்தலில் திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் புதிய ஜனநாயக முன்னணியில் போட்டியிட்ட தேசிய காங்கிரஸின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம். அதாஉல்லா, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனை பிராந்திய அலுவலகத்திற்கு இன்று (10) சென்று, நடந்து முடிந்த பொதுத் தேர்தல் தொடர்பான முறைப்பாடுகள் அடங்கிய முறைப்பாட்டுக் கடிதமொன்றை கையளித்தார்.

திகாமடுல்ல மாவட்டத்தின் தேர்தல் முடிவுகளை மீள எண்ண வேண்டும் என்றும், கடந்த தேர்தல் காலத்தில் தேசிய காங்கிரஸ் தலைவராக – தன்னை குறிவைத்து பின்னப்பட்ட பல நகர்வுகள் மற்றும் இடையூறுகள் தொடர்பில் விசாரிக்கப்பட வேண்டுமெனவும் அந்தக் கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளார்.

தனது முறைப்பாட்டைக் கையளித்த பின்னர் ஊடகங்களிடம் பேசிய அதாஉல்லா; நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் – திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் வாக்காளர்களின் உரிமைகள் திட்டமிடப்பட்ட வகையில் மறுக்கப்பட்டதுடன், வாக்குகள் எண்ணப்பட்டதிலும் பாரதூரமான மோசடிகள் இடம்பெற்றுள்ளன என்றார்.

“மேலும், அம்பாறை மாவட்டக் கச்சேரியில் எமக்கு எதிரான சதி வலை பின்னல் தொடர்ந்தது. ஆரம்பத்தில் காலையில் ஒரு விதமாகவும், பின்னர் வேறு ஒரு விதமாகவும் முடிவுகள் அறிவிக்கப்படலாயின. நாம் திகாமடுல்ல தேர்தல் மாவட்ட முடிவுகளை ஏற்று கொள்ளவில்லை. ஏற்பதாக கையொப்பம் இட்டு கொடுக்கவில்லை. வெளிப்படையாகவே ஆட்சேபித்தோம்.

“ஆனால் புதிய ஜனநாயக முன்னணி 88 வாக்குகளால் தோற்றதாக அறிவிக்கப்பட்டது. மீளவும் வாக்குகள் எண்ணப்பட வேண்டும் என்று சட்டப்படி முறையாக கச்சேரியில் கோரினோம். ஆனால் வாக்குகள் மீண்டும் எண்ணப்படவே இல்லை. இதை ஆட்சேபித்து கொழும்பில் தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளோம். தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் எழுத்துமூலம் பல தகவல்களையும் திரட்டியுள்ளோம்.

அவசியம் ஏற்படுகின்ற பட்சத்தில் உயர்நிலை நீதிமன்றங்களில் வழக்கு நடவடிக்கைகளை நிச்சயம் மேற்கொள்வோம். நீதிக்கான எமது போராட்டம் தொடரும். நாம் கடந்த காலங்களில் அரசியலில் பல நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வெற்றி கண்டிருக்கிறோம்” என்றார்.

இந்த முறைப்பாடு கையளிக்கப்பட்ட நிகழ்வில் சட்டத்தரணி எம்.எம்.எம். முஅஸ்ஸம் கலந்து கொண்டதுடன் ஊடகங்களிடமும் பேசினார்.

தொடர்பான செய்தி: திகாமடுல்ல வாக்குகளை மீளவும் எண்ணுங்கள்: தேர்தல் ஆணைக்குழுவிடம் அதாஉல்லா எழுத்து மூலம் கோரிக்கை