திகாமடுல்ல வாக்குகளை மீளவும் எண்ணுங்கள்: தேர்தல் ஆணைக்குழுவிடம் அதாஉல்லா எழுத்து மூலம் கோரிக்கை
🕔 November 22, 2024
நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தலில் திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தின் வாக்குகள் மீளவும் எண்ணப்பட வேண்டும் என, அந்த மாவட்டத்தில் புதிய ஜனநாயக முன்னணியின் சிலிண்டர் சின்னத்தில் போட்டியிட்ட – தேசிய காங்கிரஸ் தலைவர் ஏ.எல்.எம். அதாஉல்லா – தேர்தல் ஆணைக்குழுவிடம் எழுத்து மூலமான கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளார்.
இது தொடர்பான மனுவொன்றை ஏ.எல்.எம். அதாஉல்லா இன்று (22) தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்கவிடம் கையளித்தார்.
திகாமடுல்ல மாவட்டத்தின் தேர்தல் முடிவுகள் மீள எண்ணப்பட வேண்டும் என்பதையும், கடந்த தேர்தல் காலத்தில் தேசிய காங்கிரஸ் தலைவராக தன்னை குறிவைத்து பின்னப்பட்ட பல நகர்வுகளையும் இடையூறுகளையும் உள்ளடக்கிய பல்வேறு விடயங்களை விசாரிக்குமாறும் தனது மனுவில் அதாஉல்லா கோரியுள்ளார்.
இது தொடர்பாக அதாஉல்லாவின் பேஸ்புக் பக்கத்தில் பதிவொன்று இடப்பட்டுள்ளது. அதில், ‘நியாயத்துக்காக எப்போதும் குரல் கொடுக்கும் தேசிய காங்கிரஸ், இது தொடர்பில் விரிவான விளக்கங்களை மிக விரைவில் மக்கள் மன்றில் சமர்ப்பித்து அதன் அரசியல் போராட்டத்தை தொடரும்’ என, தெரிவிக்கப்பட்டுள்ளது.