தலைப்புச் செய்திகள்

மூன்று ‘துரோகி’களும் தோல்வி: மக்கள் காங்கிரஸ் ஆதரவாளர்கள் சமூக ஊடகங்களில் கொண்டாட்டம்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் கடந்த முறை நாடாளுமன்றம் சென்று, பின்னர் அந்தக் கட்சியின் தீர்மானங்களுக்கு மாறாக – ஆளுந்தரப்புடன் இணைந்து அரசியலில் ஈடுபட்டு வந்த – மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களும், இம்முறை நடைபெற்ற பொதுத் தேர்தலில் தோல்வியுள்ளனர்.

கடந்த நாடாளுமன்றுக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக, அந்தக் கட்சியின் தலைவர் றிசாட் பதியுதீன் (வன்னி மாவட்டம்), எஸ்.எம். முஷாரப் (அம்பாறை மாவட்டம்), இஷாக் ரஹ்மான் (அனுராதபுரம்) மற்றும் அலி சப்ரி ரஹீம் (புத்தளம் மாவட்டம்) ஆகியோர் நாடாளுமன்றத்துக்கு தெரிவாகினர்.

இருந்த போதும், றிசாட் பதியுதீன் – நாடாளுமன்றில் எதிர்க்கட்சியில் இருக்கத் தக்கதாக, அந்தக் கட்சியின் மேற்குறிப்பிட்ட மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களும், அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் இணைந்து கொண்டு, தங்கள் கட்சித் தலைவருக்கு எதிராக செயற்பட்டனர்.

இதனையடுத்து மேற்படி மூவருக்கும் எதிராக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்தது.

பின்னர் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்துக்கும் இவர்கள் ஆதரவளித்தனர்.

இவர்கள் மூவரும் இவ்வாறு கட்சிக்கு எதிராக செயற்பட்டமையினால், இவர்கள் மூவரையும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியினர் – ‘துரோகிகள்’ எனக் கூறி வந்தனர்.

இந்த நிலையில், மேற்படி மூவரும், நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்துள்ளனர்.

இதனையடுத்து ‘துரோகிகள் தோல்வியடைந்து விட்டார்கள்’ என, சமூக ஊடகங்களில் குறிப்பிட்டு, மக்கள் காங்கிரஸ் ஆதரவாளர்கள் – இவர்களின் தோல்வியை கொண்டாடி வருகின்றனர்.

முஷாரப், அலிசப்ரி ரஹீம் மற்றும் இஷாக் ரஹ்மான் ஆகியோர் – மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாட் பதியுதீனை பகிரங்கமாக ஏசிப் பேசி வந்தமையும் குறிப்பிடத்தக்கது