தலைப்புச் செய்திகள்

கற்றல் உபகரணங்களுக்காக மாணவர்களுக்கு கொடுப்பனவு: ஜனவரியில் வழங்கப்படும் என்கிறார் ஜனாதிபதி

பாடசாலை கொப்பிகள் மற்றும் கற்றல் உபகரணங்களை கொள்வனவு செய்ய முடியாத மாணவர்களுக்கு கொடுப்பனவு வழங்கப்படும் என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

அடுத்த வருடம் ஜனவரி மாத இறுதியில் புதிய பாடசாலை தவணை ஆரம்பிக்கும் போது இந்த கொடுப்பனவு வழங்கப்படும் என அவர் கூறியுள்ளார்.

கேகாலையில் இன்று வெள்ளிக்கிழமை (08) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே – ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.

“புதிய பாடசாலைப் பருவம் ஜனவரி இறுதியில் தொடங்கும். புதிய தவணையில் பிள்ளைகள் பாடசாலைக்குச் செல்லும் போது, ​​கொப்பிகள் மற்றும் கற்றல் உபகரணங்களை உரிய முறையில் கொள்வனவு செய்ய முடியாத சகல பிள்ளைகளுக்கும் கொடுப்பனவு வழங்குவோம்” என்றார்.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தனது முதல் வரவு – செலவுத் திட்டத்தின் மூலம், அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அஸ்வெசும நலன்புரிப் பலன்களைப் பெறாதவர்கள் மீண்டும் மேன்முறையீடுகளை முன்வைக்க அனுமதிக்குமாறு, பிரதேச செயலகங்களுக்கு ஏற்கனவே அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி மேலும் கூறினார்.

“எந்தவித அரசியல் தலையீடும் இல்லாமல் பாரபட்சமற்ற முறையில் மேல்முறையீடுகள் பரிசீலிக்கப்படும. மேலும் உணவு அல்லது மருந்து வாங்க முடியாத அனைத்து குடும்பங்களுக்கும் ஒரு குறிப்பிட்ட கொடுப்பனவு வழங்கப்படுவதை நாங்கள் உறுதி செய்வோம்” என்று அவர் மேலும் தெரிவித்தார்.