
– பாறுக் ஷிஹான் –
நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் – ஈழ மக்கள் ஜனநாயக கட்சி (ஈபிடிபி) அம்பாறை மாவட்டத்தில் தனித்து போட்டியிடவுள்ளதாக, அக்கட்சியின் அம்பாறை மாவட்ட பிரதான அமைப்பாளரும் காரைதீவு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளாருமான செல்லையா ராசையா தெரிவித்தார்.
எதிர்வரும் பொதுத்தேர்தல் தொடர்பில் நேற்று (08) காரைதீவில் நடத்திய ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போது, அவர் இதனைக் கூறினார்.
“ஈபிடிபி கட்சியின் முதன்மை வேட்பாளராக இம்முறை நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடுகின்றேன். ஈழ மக்கள் ஜனநாயக கட்சி (EPDP) அம்பாறை மாவட்டத்தில் தனித்து போட்டியிடும்.
கடந்த காலங்களில் தேசியத்துடன் நாங்கள் சென்றவர்கள். தற்போதுள்ள காலகட்டத்தில் எமக்கு தேசியத்துடன் உடன்பாடு இல்லை. காரணம் மக்களை ஏமாற்றி வாக்குகளை சுவீகரிக்கின்ற நிலைதான் தொடர்ந்து வருகின்றது.
தற்போது மக்கள் மிகவும் சிரமத்திற்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றார்கள். அவர்களுக்கான வாழ்வாதாரங்களை பெற்றுக்கொடுப்பதுதான் எமது முதல் நோக்கமாகும். இதை விட்டுவிட்டு வெறுமனே தேசியத்தை பேசிவிட்டு காலத்தை கடத்துவது – உசிதமான விடயமல்ல” என்றார்.



