
முறையான வீசா இன்றி பாணந்துறை – கோரக்கன பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில்தங்கியிருந்த 20 சீன பிரஜைகளை – பொலிஸார் கைது செய்துள்ளனர். மேல்மாகாண புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
குறித்த ஹோட்டலில் சோதனை மேற்கொண்ட பாணந்துறை விசேட குற்றத்தடுப்புப் பிரிவின் அதிகாரிகள், மேற்படி நபர்கள் மாதாந்த வாடகையாக 02 மில்லியன் ரூபாய் செலுத்தியிருந்தமையைக் கண்டறிந்தனர்.
சோதனையின் போது, 05 மடிக்கணினிகள், 437 கைத் தொலைபேசிகள், 332 USB கேபிள்கள், 133 மொபைல் போன் சார்ஜர்கள், 21 USB வயர் கார்டுகள், 17 ரவ்ட்டர்கள், 02 ஐபோன்கள் மற்றும் பிற பாகங்கள் உட்பட கணிசமான எண்ணிக்கையிலான மின்னணு சாதனங்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
இந்த பொருட்கள் – நிதி மோசடிகளுடன் தொடர்புடையவையாக இருக்கும் என சந்தேகிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்ட நபர்களுக்கு, அவர்கள் நீண்ட காலமாக தங்கியிருந்த ஹோட்டலில் இருந்து உணவு வழங்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர்கள் 20 பேரும் இன்று பாணந்துறை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ள நிலையில், இந்தக் குழு ஏதேனும் நிதிக் குற்றங்களுடன் தொடர்புடையதா என பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



