
ஐனாதிபதி செயலகத்தின் கீழ் ‘வெளிநாட்டிலுள்ள இலங்கையர்களின் விவகார செயலகம்’, ‘பங்கேற்பு ஜனநாயகத்தை பலப்படுத்துவதற்கான மக்கள் சபை முறையை நிறுவுவதற்கான தேசிய மக்கள் சபை செயலகம்’ மற்றும் ‘விவசாய நவீனமயப்படுத்தல் நிகழ்ச்சித்திட்டம்’ ஆகியவற்றை செயல்படுத்துவதற்காக ஒப்பந்த அடிப்படையில் ஆட்சேர்ப்புச் செய்யப்பட்டுள்ள அலுவலர்கள் / ஆலோசகர்களின் சேவையை ரத்துச் செய்வதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
கடந்த அரசாங்கத்தின் அமைச்சரவையில் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு அமைய, மேற்படி அலுவலகங்களைச் செயற்படுத்துவதற்காக – ஒப்பந்த அடிப்படையில் மேற்படி ஆட்சேர்ப்புகள் செய்யப்பட்டன.
ஆயினும் மேற்குறித்த அலுவலகங்கள் மற்றும் நிகழ்ச்சித்திட்டங்கள் மூலம் எதிர்பார்க்கப்படும் கருமங்களை, அதனுடன் தொடர்புடைய அமைச்சுகள் ஊடாக அமுல்படுத்தவதற்கான இயலுமை இருப்பதனால், அதற்காக ஒப்பந்த அடிப்படையில் ஆட்சேர்ப்புச் செய்யப்பட்டுள்ள அலுவலர்கள் / ஆலோசகர்களின் சேவைகளை ரத்துச் செய்வதற்கு அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சேவையை 2024-09-30 திகதியிலிருந்து அமுலாகும் வகையில் முடிவுறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நேற்று (07) ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.



