தலைப்புச் செய்திகள்

அனுரவின் நாடாளுமன்ற ஆசனத்தை லக்ஷ்மன் நிபுண ஆராச்சி நிரப்புகிறார்

புதிய ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள அநுர குமார திசாநாயக்கவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆசனத்தை, விருப்பு வாக்குகளின் அடிப்படையில் அவருக்கு அடுத்த இடத்திலுள்ள – தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் லக்ஷ்மன் நிபுண ஆராச்சி நிரப்புவார் என அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

புதிய நாடாளுமன்ற உறுப்பினரை நியமிப்பது தங்களின் வேலையல்ல என்றும், தேர்தல் சட்டத்தின்படி தேர்தல் ஆணைக்குழுவே அதைச் செய்ய வேண்டும் என்றும் அவர் ஊடகங்களுக்கு கூறியுள்ளார்.

அனுர குமார திஸாநாயக்கவுக்கு அடுத்தபடியாக விருப்பு வாக்கு பட்டியலில் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் லக்ஷ்மன் நிபுணாராச்சி உள்ளார் என்றும், அவர் தேர்தல் ஆணைக்குழுவினால் புதிய நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்படுவார் என்றும் ரில்வின் சில்வா மேலும் தெரிவித்தார்.

புதிய நாடாளுமன்ற உறுப்பினராக நியமனம் பெறவுள்ள லக்ஷமன் நிபுண ஆராச்சி, தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.