
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கு முந்திய காலம் – ஏனைய தேர்தல்களுடன் ஒப்பிடுகையில் அமைதியானதாக இருந்த போதிலும், செப்டெம்பர் மாதம் 08 முதல் செப்டம்பர் 14 ஆம் திகதியிலிருந்து தேர்தல் தொடர்பான வன்முறைச் சம்பவங்கள் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளதாக ‘கஃப’ எனும் – சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலுக்கான பிரச்சாரம் (CaFFE) தெரிவித்துள்ளது.
அச்சுறுத்தல், அரசியல் கட்சி ஆதரவாளர்களைத் தாக்குதல் மற்றும் கட்சி அலுவலகங்களுக்கு சேதம் விளைவித்தல் போன்ற சம்பவங்களில் பெரும்பாலானவை பதிவாகியுள்ளன என்றும் ‘கஃப’யின் நிறைவேற்றுப் பணிப்பாளர் மனாஸ் மக்கீன் சுட்டிக்காட்டினார்.
மேலும், ஜனாதிபதி வேட்பாளர்களை அவமதிக்கும் வகையில் சமூக ஊடகங்களில் பகிரப்படும் பதிவுகள் அதிகரித்து வருவதாகவும் அவதானிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, மேற்கூறிய போக்குகள் தொடருமானால், சுதந்திரமானதும் நியாயமானதுமான தேர்தலை நடத்துவதற்கு அது பாதகமாக அமையும் எனவும் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலுக்கான பிரச்சாரம் எச்சரித்துள்ளது.



