தலைப்புச் செய்திகள்

110 வருடங்களுக்கு முன்னர் தூக்கிலிடப்பட்டவருக்கு, பொதுமன்னிப்பு வழங்கி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தரவு

இலங்கையில் 1915ஆம் ஆண்டு தூக்கிலிடப்பட்ட தியுனுகே எட்வர்ட் ஹென்றி பெட்ரிஸ் (Diyunuge Edward Henry Pedris) என்பவருக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பொதுமன்னிப்பு வழங்கியுள்ளார்.

1915ஆம் ஆண்டு ஜூன் 25ஆம் திகதி அப்போதைய இலங்கை ஆளுநரால் நியமிக்கப்பட்ட ராணுவ நீதிமன்றத்தின் நியாயமற்ற விசாரணையைத் தொடர்ந்து, ஜூலை 7, 1915 இல் 27 வயதுடைய தியுனுகே எட்வர்ட் ஹென்றி பெட்ரிஸ் தூக்கிலிடப்பட்டார்.

அதன் பின்னர் ராணுவ சட்டத்தின் கீழ் அடையாளம் வெளியிடப்படாத இடத்தில் அவரின் உடல் தகனம் செய்யப்பட்டது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அரசியலமைப்பின் 33 (எச்) மற்றும் 34 வது சரத்தின் கீழ் தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி, இந்தப் பொதுமன்னிப்பை வழங்கியுள்ளார்.

கலவரம் மற்றும் தேசத்துரோக குற்றச்சாட்டில் அநியாயமாக குற்றம் சாட்டப்பட்ட பெத்ரிஸுக்கு வழங்கப்பட்ட தவறான மரணதண்டனையை சரிசெய்யும் வகையில் இந்த மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.

பெட்ரிஸ் மற்றும் அவரின் குடும்பத்தினருக்கு நீதி வழங்குவதற்காக, பெட்ரிஸின் மரணதண்டனையின் சூழ்நிலைகளை மறுபரிசீலனை செய்யவும், அது தொடர்பில் அமைச்சரவைக்கு பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை சமர்ப்பிக்கும் பொருட்டும், ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி அனில் குணரத்ன தலைமையிலான மூன்று பேர் கொண்ட குழு 2023ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நியமிக்கப்பட்டது.