மக்கள் எவ்வாறு வாக்களிப்பார்கள் என்று ஹக்கீம் இன்னும் கண்டுபிடிக்கவில்லை; றிசாட் நேற்று வந்த பிள்ளை: அதாஉல்லா தெரிவிப்பு
🕔 August 20, 2024
– பாறுக் ஷிஹான் –
ஜனாதிபதித் தேர்தலொன்றில் மக்கள் எவ்வாறு வாக்களிப்பார்கள் என்பதை றஊப் ஹக்கீம் இன்னும் கண்டுபிடிக்கவில்லை என்று தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.எம் அதாஉல்லா தெரிவித்தார்.
நாட்டின் நலன் கருதியும் நன்றிக் கடனுக்காகவும் இம்முறை ஜனாதிபதித்தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவை தாம் ஆதரிப்பதாக அவர் கூறினார்.
”கொரோனா காரணமாக மரணித்த முஸ்லிம்களின் உடல்கள் (ஜனாஸாகள்) எரிக்கப்பட்ட போது நான் நாட்டில் இருக்கவில்லை” என்றும் அவர் குறிப்பிட்டார்.
தேசிய காங்கிரஸ் கட்சியின 20 ஆவது பேராளர் மாநாடு நேற்று திங்கட்கிழமை (19) மாலை அக்கரைப்பற்று – அதாஉல்லா அரங்கில் இடம்பெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே, அவர் இந்த விடயங்களைக் குறிப்பிட்டார்.
அவர் தொடர்ந்து பேசுகையில்;
“அரசியல் என்பது காலத்தின் தேவை. நடக்கவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் எவரும் பிரதமராக இருந்து ஜனாதிபதி தேர்தல் கேட்கவில்லை. வழக்கமாக நான் கூறுவது போன்று ‘பால் போத்தல்கள்’ உருண்டு ஓடுகின்றன.
”முகப்புத்தக போராளிகளுக்கு அரசியல் என்பது புரியாத புதிராக இருக்கின்றது. றிசாட் பதியுதீன் என்பவர் அரசியலுக்கு நேற்று வந்த பிள்ளை.சொந்த தேவைகளுக்கு அப்பால் அந்தந்த காலங்களில் தலைவர்களை – தேசிய காங்கிரஸ் தெரிவு செய்தது என்பதை சகலரும் அறிய வேண்டும்.
யுத்தம், சூறாவளி போன்றவற்றை நாம் பார்த்திருக்கின்றோம். அவை அழிவுகள். ஆனால் எரிவாயு மற்றும் பெற்றோல் இன்றி வீதியில் அநாதரவாக இருந்த சந்தர்ப்பங்கள்தான், முன்னர் சொன்னஅழிவுகளை விட கொடுமையானது. பத்தும் பறக்கின்ற கொடுமை. எத்தனை பெற்றோல் பவுசர்கள் எரிக்கப்பட்டன.
இவைது தவிர, நாட்டின் பொருளாதாரத்தைப் பற்றி எப்போதும் தேசிய காங்கிரஸ் பேசிக்கொண்டுதான் இருக்கின்றது. எப்போதும் உண்மையைத்தான் பேசிக்கொண்டு இருக்கின்றோம். அதுமாத்திரமன்றி கொரோனா மையத்துக்கள் எரிக்கின்ற போது நான் நாட்டில் இருக்கவில்லை என்பதையும் நினைவுபடுத்துகிறேன்” என்றார்.