
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிப்பதற்காக, நாடாளுமன்ற உறுப்பினர் றிஷாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ‘ஐக்கிய மக்கள் கூட்டணி’யுடன் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளது.
கொழும்பில் உள்ள சினமன் லேக் ஹோட்டலில் ஐக்கிய மக்கள் சக்தி தலைவரும் ஜனாதிபதி வேட்பாளருமான சஜித் பிரேமதாச மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், முன்னாள் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.
ஐக்கிய மக்கள் சக்தியின்பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார, தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் செயலாளர் எஸ். சுபைர்தீன் உள்ளிட்டோரும் இதில் கலந்து கொண்டனர்.
ஜனாதிபதி தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் – எந்த வேட்பாளரை ஆதரிக்க வேண்டும் என்பது தொடர்பில், அந்தக் கட்சியினர் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தொடர்ச்சியாக மக்கள் கருத்தறிந்த பின்னர், நேற்று தமது முடிவை உத்தியோகபூர்வமாக அந்தக் கட்சி அறிவித்தது.



