தலைப்புச் செய்திகள்

அட்டாளைச்சேனை பெரிய பள்ளிவாசலுக்குரிய, காணாமலாக்கப்பட்ட காணிகளை அடையாளம் காணும் பணிகள் பூர்த்தி

– அஹமட் –

அட்டாளைச்சேனை ஜும்ஆ பெரிய பள்ளிவாசலுக்குச் சொந்தமான 13 ஏக்கருக்கும் அதிகளவான காணிகள் காணமலாக்கப்பட்டுள்ள நிலையில், குறித்த காணிகள் அமையப் பெற்றுள்ள இடத்துக்கு கள விஜயம் மேற்கொண்ட பள்ளிவாசல் நிர்வாகத்தினர், காணிகளை அடையாளம் கண்டுள்ளனர்.

அட்டாளைச்சேனை பெரிய பள்ளிவாசல் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் ஏ.எல்.எம். ஹனீஸ் தலைமையிலான நிர்வாகத்தினர், மரைக்காயர் சபை பிரதிநிதிகள் மற்றும் காணிகள் மற்றும் சொத்துக்களைக் கண்காணிக்கும் குழுவினர் – நேற்று ஞாயிற்றுக்கிழமை (11), குறித்த காணிகள் அமையப் பெற்றுள்ள இடங்களுக்கு ஆவணங்களுடன் கள விஜயமொன்றை மேற்கொண்டனர்.

இதன்போது சில காணிகள் – ஆவணத்தில் உள்ள அளவிலும் மிகவும் குறைந்தளவில் காணப்பட்டதோடு, சில காணிகள் காணாமலாக்கப்பட்டிருந்தமையினையும் அவதானிக்க முடிந்தது.

இதனையடுத்து, பள்ளிவாசலுக்குச் சொந்தமான காணிகள் உள்ள இடங்களில் ‘இது பெரிய பள்ளிவாசலுக்குச் சொந்தமான காணி’ எனும் அறிவிப்புப் பலகைகளைக் காட்சிப்படுத்துவதெனவும், பள்ளிவாசல் காணிகளின் எல்லைகளில் மற்றும் அருகிலுள்ள ஏனைய காணிகளின் உரிமையாளர்களை அழைத்து, ஆவணங்களில் உள்ளபடி பள்ளிவாசல் காணிகளின் முழுமையான பரப்புக்களையும் பெற்றுக் கொள்கின்றமை தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்துவதெனவும் இதன்போது இணக்கம் காணப்பட்டது.

இவ்வாறான பேச்சுவார்த்தைகள் வெற்றியளிக்காத பட்சத்தில், குறித்த காணிகள் தொடர்பில் – சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கும் தீர்மானமொன்றுக்கு வருவதெனவும், கள விஜயத்தில் ஈடுபட்டோர் இணங்கிக் கொண்டனர்.

அட்டாளைச்சேனை குடாக்கரை கிழக்கு, குடக்காரை நடுவத்து வெளி, கொக்கட்டியா வெளி, நெடிய மருதையடி வெளி, வம்மியடி பள்ளம், இப்றாகிம் வெளிப்பள்ளம், முண்டப்போடி வெளி மற்றும் காசிம் வெளி ஆகிய இடங்களிலுள்ள 13 ஏக்கருக்கும் அதிகளவான – பெரிய பள்ளிவாசலுக்குச் சொந்தமான காணிகள் காணாமலாக்கப்பட்டுள்ளன.

அட்டாளைச்சேனை பெரிய பள்ளிவாசலின் தலைவர் ஏ.எல்.எம். ஹனீஸ் தலைமையில் குறித்த காணிகளை மீட்கும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்பான செய்தி: காணாமலாக்கப்பட்ட காணிகளைத் தேடி, அட்டாளைச்சேனை பெரிய பள்ளிவாசல் குழுவினர் நாளை ஞாயிறு கள விஜயம்