தலைப்புச் செய்திகள்

ரணிலுக்கு ஆதரவு: பவித்ரா அறிவிப்பு

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் – ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்கவுள்ளதாக நீர்ப்பாசன, வனவிலங்கு மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி இன்று (08) தெரிவித்துள்ளார்.

பொதுஜன பெரமுன கட்சியின் – ரத்தினபுரி மாவட்டத்திலுள்ள பெரும்பாலான உறுப்பினர்கள் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்குமாறு தமக்கு அறிவித்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

“முக்கியமான அரசியல் முடிவுகளை எடுக்கும்போது, ​​என்னுடன் பணியாற்றும் ரத்தினபுரி மாவட்ட மக்கள் மற்றும் கட்சி உறுப்பினர்களுக்கு செவிசாய்க்கும் கொள்கையை நான் எப்போதும் பின்பற்றுகிறேன்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“மேலும், நாம் அனைவரும் பெரும் தியாகங்களைச் செய்து ஸ்திரப்படுத்திய நமது தாய்நாட்டை – மேலும் கட்டியெழுப்புவதற்கு, நேரடியான மற்றும் யதார்த்தமான முடிவுகளை எடுக்கும் அரசாங்கத் தலைவர் இந்த தருணத்தில் தேவை என்று நான் நம்புகிறேன்” என்றும் பவித்ரா கூறியுள்ளார்.

எனவே, பொதுஜன பெரமுனவில் தொடர்ந்து இருந்து கொண்டு – ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பொதுஜன பெரமுன கட்சி சார்பில் ஜனாதிபதி வேட்பாளரை நிறுத்துவதற்கான தீர்மானத்தை எடுக்கும் – அந்தக் கட்சியின் கூட்டத்தில் பவித்ரா வன்னியாராச்சி கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.