தலைப்புச் செய்திகள்

நாட்டின் வீழ்ச்சிக்குக் காரணமான மோசடிக்காரர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கப்படும்: ஐக்கிய மக்கள் கூட்டணி உறுதியுரையில் தெரிவிப்பு

நாட்டின் வீழ்ச்சிக்குக் காரணமான சகல தரப்பு மோசடிக்காரர்கள் மற்றும் ஊழல்வாதிகளுக்கு – ஆகக்கூடிய தண்டனைகளை வழங்கவும், முறைகேடாக ஈட்டிய அனைத்து சொத்துக்களையும், நிதி வளங்களையும் மீளவும் இந்நாட்டு மக்களுக்கு கிடைக்கக் கூடியவாறான நடைமுறையை உருவாக்குவதற்கும், ஐக்கிய மக்கள் கூட்டணியின் உறுதியுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாசவை வெற்றி பெறச் செய்வதற்காக, இன்று கைச்சாத்திடப்பட்டு உருவாக்கப்பட்டுள்ள ஐக்கிய மக்கள் கூட்டணியின் உறுதியுரையில் தெரிவிக்கப்பட்டுள்ள முழு விபரம் வருமாறு;

சுதந்திரமானதும், சுயாதீனமானதும், பிரிவினையற்றதுமான, பெருமைக்குரிய தேசத்தின் தேசிய அடையாளத்தைப் பேணிக் கொண்டு இலங்கையராக நல்லிணக்கத்துடன் வாழ்வதற்கான சூழலை உருவாக்குதல்.

வறுமையை ஒழித்தலை எமது முழுப் பொறுப்பாகக் கருதி வறுமைக் கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களுக்குத் தேவையான வளங்களையும், நியாயமான வாய்ப்புகளையும் வழங்கி, அவர்களின் பொருளாதார மற்றும் சமூக நிலைமைகளை மேம்படுத்தி வளமான சமுதாயத்தை உருவாக்குதல்.

நவீன உலகிற்கு ஏற்றவாறு தரமான கல்வி முறையுடன் ஏற்றத்தாழ்வுகளைக் குறைத்து மாணவர் சமுதாயத்தை மையமாகக் கொண்ட கற்கை நடைமுறைகளை உருவாக்குதல்.

ஊழல் மற்றும் மோசடியை முழுமையாக அகற்றக்கூடிய வலுவான சட்ட முறைமைகளை உருவாக்கி, நாட்டின் வீழ்ச்சிக்குக் காரணமான சகல தரப்பு மோசடிக்காரர்கள் மற்றும் ஊழல்வாதிகளுக்கு ஆகக்கூடிய தண்டனைகளை வழங்கவும், முறைகேடாக ஈட்டிய அனைத்து சொத்துக்களையும், நிதி வளங்களையும் மீளவும் இந்நாட்டு மக்களுக்கு கிடைக்கக் கூடியவாறான நடைமுறையை உருவாக்குவதல்.

ஜனநாயகம், சட்டத்தின் இறையாண்மை, மனித உரிமைகள் மற்றும் கலாசார மாண்புகளைப் பாதுகாக்கும் ஆட்சியை உருவாக்குவதுடன், தாய்நாட்டின் வளர்ச்சியை மையமாகக் கொண்ட சிறந்த வெளியுறவுக் கொள்கையைப் பின்பற்றி வலுவான மற்றும் நிலையான சர்வதேச உறவுகளைப் பேணுதல்.

தேசியப் பாதுகாப்பு மற்றும் மக்களின் அன்றாட வாழ்க்கையின் மிக அத்தியாவசிய அம்சங்களில் – அரசின் தலையீடு வலியுறுத்தப்பட்டு, சுதேச தொழில் முயற்சியாளர்களை வலுப்படுத்தி பத்து லட்சம் தொழில் முயற்சியாளர்களைக் கொண்ட சமூகமொன்றைக் கட்டியெழுப்பி, அவர்களைப் பாதுகாத்து ஜனநாயக சந்தைப் பொருளாதார முறையின் அடிப்படையில் விரைவான மற்றும் நிலையான பொருளாதார வளர்ச்சியை அடைந்து கொள்தல்.

தூர நோக்கற்ற அபிவிருத்திச் செயற்பாடுகளாலும் முறைசாரா வெளிநாட்டுக் கடன்களாலும் சிக்கியுள்ள நாட்டையும் மக்களையும் கடன் பொறியிலிருந்து விடுவித்து, முறையான முகாமைத்துவத்தின் ஊடாகக் கடனைச் செலுத்தி, அந்நிய செலாவணி ஒதுக்கத்தை அதிகரித்துக் கொள்தல்.

வீட்டிலும், பாடசாலையிலும் மற்றும் சமூகத்திலும் பிள்ளைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துதல்.

புதிய நடைமுறைகளை அறிமுகப்படுத்துவதற்கும், இலங்கைப் பெண்களின் வலுவூட்டலுக்கான பொருளாதார மற்றும் சமூக அணுகுமுறைகளை விரிவுபடுத்துவதற்கும், மாற்றுத்திறனாளிச் சமூகம் உட்பட சமூகத்தில் குறைந்த கவனம் செலுத்தப்படுகின்ற அனைத்துத் தரப்பு மக்களுடனும் தொடர்புகளைப் பேணுதல்.

சுற்றாடல் பாதுகாப்பைப் பேணி நிலைபேறான வலுசக்தி முறைமைகளை விரிவாக்குவதற்கும், சுற்றாடல் சார்பு கொள்கைகளை உருவாக்குவதற்கும், சுற்றாடல் சார்புக் கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்துதல்.

ஐக்கிய மக்கள் சக்தி தலைமையில் ஐக்கிய மக்க கூட்டணி எனும் பெயரில் அரசியல் கூட்டமைப்பு ஒன்றை ஒருவாக்கி – அதில் கைச்சாத்திடும் நிகழ்வு இன்று (08) கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் நடைபெற்றது.

தொடர்பான செய்தி: சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதற்கான, ஐக்கிய மக்கள் கூட்டணி உருவானது: ஹக்கீம், மனோ உள்ளிட்டோரும் கைச்சாத்து