தலைப்புச் செய்திகள்

அமைச்சர் பந்துலவின் கடன் அட்டை மோசடி தொடர்பில் விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தரவு

அமைச்சர் பந்துல குணவர்தனவின் கடன் அட்டையை சட்டவிரோதமான முறையில் பயன்படுத்தி பொருட்களை கொள்வனவு செய்த சந்தேகநபர்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு, குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு கொழும்பு மேலதிக நீதவான் பணிப்புரை விடுத்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் அமைச்சர் செய்த முறைப்பாடு தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றத்தில் தகவல்களை முன்வைத்தமையை அடுத்து, கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெகுனாவெல – இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

05 லட்சம் ரூபாய் கடன் வரம்பு கொண்ட அரச வங்கியொன்றின் கடன் அட்டையை – நம்பிக்கை மீறல், மோசடி மற்றும் தவறாகப் பயன்படுத்தியமை குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டுமென நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

விசாரணையின் போது, ​​கடன் அட்டை தொடர்பான பரிவர்த்தனைகள் குறித்த தகவல்களை வழங்குமாறு, மேற்படி வங்கியின் முகாமையாளருக்கு உத்தரவு பிறப்பிக்குமாறும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றத்திடம் கோரியிருந்தனர்.

இதன்படி, வங்கியிடமிருந்து தேவையான தகவல்களைப் பெறுவதற்கு குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.