
– மரைக்கார் –
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் ராமநாதன் அர்ச்சுனா – இன்றைய தினம் மீண்டும் தனது பொறுப்பை ஏற்றுள்ளார். இது ‘GMOA’ எனப்படும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினருக்கு அண்மைக் காலத்தில் ஏற்பட்ட இரண்டாவது தோல்வியாகும்.
முதலாவது தோல்வி
அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் ஐ.எம். ஜவாஹிர், அந்த வைத்தியசாலையில் கடமையாற்றக் கூடாது என்று, அங்குள்ள வைத்தியர்களில் கணிசமானோர் சேர்ந்து, அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பெயரால் அண்மையில் ஆர்ப்பாட்டங்களை நடத்தியதோடு, எதிர்ப்புக்களையும் வெளியிட்டிருந்தனர். ஆனால், அவையெல்லாம் இறுதியில் புஷ்வாணமாய் போயின.
அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் பணியாற்றும் ஒரு தொகை வைத்தியர்கள் – கொழும்பு சென்று, சுகாதார அமைச்சின் செயலாளரைச் சந்தித்து வைத்திய அத்தியட்சகர் ஜவாஹிர் தொடர்பாக குற்றச்சாட்டுக்களை முன்வைத்த போதிலும், எதுவும் எடுபடவில்லை. இப்போது வைத்திய அத்தியட்சகர் ஜவாஹிருக்கு எதிராக ‘படம்’ எடுத்து ஆடியோர் பெட்டிப் பாம்பாக அடங்கிப் போன நிலையில், டொக்டர் ஜவாஹிருடைய நிர்வாகம் நன்றாக நடைபெறுகிறது.
இதேபோன்றுதான் சாவகச்சேரி வைத்தியசாலையிலும் – வைத்திய அத்தியட்சகர் அர்ச்சுனாவுக்கு எதிராக, அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பெயரால் எதிர்ப்புக் காட்டிய வைத்தியர்கள் அனைவரும் மூக்குடைபட்டுள்ளனர். டொக்டர் அர்ச்சுனாவுக்கு எதிராக வேலைப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்ட வைத்தியர்கள் – இனி அர்ச்சுனாவின் நிர்வாகத்தின் கீழ் பணியாற்ற வேண்டும் அல்லது அங்கிருந்து இடமாற்றம் பெற்றுச் செல்ல வேண்டும்.
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் அர்ச்சுனா – அங்குள்ள சில வைத்தியர்கள் தொடர்பில் கூறிய குற்றச்சாட்டுக்கள் பாரதூரமானவை. அங்குள்ள கணிசமான வைத்தியர்கள் – அவர்களின் கடமை நேரங்களில் வைத்தியசாலையில் இருப்பதில்லை என அர்ச்சுனா குறிப்பிட்டுள்ளார். கடமை நேரத்தில் சில வைத்தியர்கள் தனியார் வைத்தியசாலைகளில் வேலை பார்க்கின்றனர் எனவும், வைத்தியசாலையில் மரணிப்போரின் உடல்களை வைத்துக் கொண்டு அவற்றினை விடுவிப்பதற்காக – வைத்தியர்கள் பணம் பெறுகின்றனர் என்றும், டொக்டர் அர்ச்சுனா கூறியுள்ளார். இந்தக் குற்றச்சாட்டுகள் – கடந்து போக முடியாதவை.
இந்த நிலையில் வைத்திய அத்தியட்சகர் அர்ச்சுனாவுக்கு எதிராக, அங்குள்ள வைத்தியர்கள் முன்வைத்த குற்றச்சாட்டுகள் சில்லறைத்தனமானவையாகும். எடுத்துக்காட்டாக, ‘டொக்டர் அர்ச்சுனா – வைத்தியசாலையிலுள்ள நோயாளர்களுக்கென சமைக்கப்படும் உணவை பிடுங்கிச் சாப்பிடுகிறார்’ என்பது, அவருக்கு எதிராக எழுத்து மூலம் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளில் ஒன்றாகும்.
வைத்தியசாலைகளில் பெரும்பாலான அல்லது கணிசமான வைத்தியர்கள் செய்யும் தவறுகளை அல்லது பிழைகளை – அந்த வைத்தியசாலைகளின் பொறுப்பு வைத்தியர் சுட்டிக்காட்டுகின்ற போது, பாதிக்கப்படும் வைத்தியர்கள் அனைவரும் குழுவாகச் சேர்ந்து, தமது பிழைகளைத் தட்டிக்கேட்கும் வைத்தியப் பொறுப்பதிகாரிக்கு எதிராக, அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பெயரால் திரண்டெழுவதென்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.
‘அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்’ என்பது தெற்காசியாவில் பெரிய தொழிற்சங்கம் அல்லது தொழிற்சங்கங்களில் ஒன்றெனக் கூறப்படுகிறது. ஒவ்வொரு தொழில் சார்ந்தோரும் தமது தொழில் ரீதியான உரிமைகளைப் பெற்றுக் கொள்வதற்காக தொழிற் சங்கங்களை உருவாக்கியுள்ளனர். ஆனால், தமது தவறுகளை மறைப்பதற்கும், தமது எதிராளிகளைப் பழிவாங்குவதற்கும், தமது களவு பிடிபடும் போது தப்பிப்பதற்கான அரணாகவும் தொழிற் சங்கங்களை – யாரும் பயன்படுத்துவதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது.
தொழிற் சங்கங்களை அப்படிப் பயன்படுத்துவது, யுத்தத்தில் பயன்படுத்த வேண்டிய அம்பை – முதுகு சொறிய உபயோகிப்பதற்கு ஒப்பானதாகவே அமையும்.
நம்பிக்கை இழந்து வரும் GMOA
அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் மீது பொதுமக்களுக்கு பல சந்தர்ப்பங்களில் அவநம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது. குறிப்பாக கொரோனா காரணமாக மரணித்த முஸ்லிம்களின் உடல்களை எரிக்க வேண்டுமென்று – கோட்டா அரசாங்கத்தில் கூறப்பட்டது. அந்த உடல்களை அடக்கம் செய்தால் நிலக்கீழ் நீரில் கொரோனா வைரஸ் பரவும் என பேராசிரியர் மெத்திகா விதானகே போன்றோர் அப்போது கூறினர். ஆனால், பொய்யான கூற்றுக்கு எதிராக, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் – ஒரு வார்த்தை கூட பேசவில்லை என்பது, உண்மைக்கு எதிரான வரலாற்றுத் துரோகமாகும்.
எனவே, ‘அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்’ என்பது – பிழைகளைச் செய்து விட்டுத் தப்பிப்பவர்களுக்கான பாதுகாப்பு அரணாக இருக்கக் கூடாது. அதேபோன்று, தங்கள் பிழைகளிலிருந்து தப்பிப்பதற்காக சில வைத்தியர்கள் – அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பெயரைப் பயன்படுத்தவும் கூடாது. அப்படிச் செய்தால் அக்கரைப்பற்று மற்றும் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைகளில் மூக்குடைபட்ட நிலை தொடர்வது தவிர்க்க முயாததாகி விடும்.
பொதுமக்கள் சார்பாக திரும்பவும் கூறுகிறோம், போர் புரிவதற்கான அம்பினால் முதுகு சொறிவதை சம்பந்தப்பட்டோர் நிறுத்திக் கொள்ள வேண்டும். “இல்லை நாங்கள் அப்படித்தான் செய்வோம்” என்றால், பிறகு ‘அம்பு’க்கான மரியாதை இல்லாமல் போய்விடும். அவ்வளவுதான்.



