ஈஸ்டர் தாக்குதல் வழக்கில், மைத்திரி உள்ளிட்டோருக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகைகளை ஓகஸ்ட் 30க்குள் செலுத்துமாறு நீதிமன்றம் உத்தரவு

🕔 July 16, 2024

ஸ்டர் தின தாக்குதல் தொடர்பான வழக்கில் – முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்டோருக்கு உச்ச நீதிமன்றம் விதித்த அபராதத் தொகைகளை ஓகஸ்ட் 30ஆம் திகதிக்கு முன்னர் செலுத்த வேண்டுமென உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவின் பிரதானி நிலந்த ஜயவர்தன ஆகியோருக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த திகதிக்கு முன்னர் அவர்கள் தங்களுக்கு விதிக்கப்பட்ட தொகையைச் செலுத்தத் தவறினால், நீதிமன்றத்தை அவமதித்தமைக்காக செப்டம்பர் 20ஆம் திகதிக்கு முன்னர் – அவர்களுக்கு எதிராக வழக்குத் தொடர தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு சட்டமா அதிபருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அத்துடன், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் பிரகாரம், அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் தலைவர் நிலந்த ஜயவர்தனவுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை நடத்தி, அதன் முன்னேற்றம் குறித்து நீதிமன்றத்தில் செப்டம்பர் 20ஆம் திகதி அறிக்கை தாக்கல் செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு தேசிய பொலிஸ் ஆணைக்குழுவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதற்கிடையில், முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு விதிக்கப்பட்ட 75 மில்லியன் அபராதத் தொகையில், 1.9 மில்லியன் ரூபாய் மட்டுமே செலுத்தப்பட்டுள்ளதாக நீதிமன்றுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்றத்தால் உத்தரவிடப்பட்ட மொத்த இழப்பீட்டுத் தொகையையும் அப்போதைய பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ செலுத்திவிட்டதாகவும் நீதிமன்றத்தில் கூறப்பட்டுள்ளது. அவருக்கு 50 மில்லியன் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

முன்னாள் மைத்திரிபால சிறிசேன சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி பைசர் முஸ்தபா, தனது கட்சிக்காரருக்கு விதிக்கப்பட்ட 100 மில்லியன் ரூபாய் அபராத் தொகையில் ஏற்கனவே 58 மில்லியன் ரூபாயை செலுத்தி விட்டதாகவும், மிகுதித் தொகை 42 மில்லியன் ரூபாயினையும் செலுத்துவதற்கு 2033ஆம் ஆண்டுவரை அவகாசம் வழங்குமாறும் கேட்டுக் கொண்டார். ஆயினும் நீதிமன்றம் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை.

தொடர்பான செய்தி: தனக்கு விதிக்கப்பட்ட 100 மில்லியன் ரூபாய் அபராதத் தொகையை செலுத்தி முடிக்க, 2033 வரை அவகாசம் கோரி மைத்திரி மனுத்தாக்கல்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்