
ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதலைத் தடுக்கத் தவறியதற்காக, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு உச்ச நீதிமன்றம் விதித்த 100 மில்லியன் ரூபாய் அபராதத் தொகையை செலுத்தி முடிப்பதற்கு 2033ஆம் ஆண்டு வரை அவகாசம் வழங்குமாறு கோரி, அவரின் சட்டத்தரணிகள் உச்ச நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
நீதிமன்றம் விதித்த 100 மில்லியன் ரூபாய் அபராதத் தொகையில் 58 மில்லியன் ரூபாய் ஏற்கனவே செலுத்தப்பட்டுள்ளதாகவும், அவரின் சட்டத்தரணிகள் உச்ச நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, எஞ்சிய தொகையை செலுத்துவதற்கான காலத்தை மேலும் 06 வருடங்கள் நீடிக்குமாறு, முன்னாள் ஜனாதிபதி தனது சட்டத்தரணிகள் ஊடாக நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஈஸ்டர் குண்டுத் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்குமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிக்கு நீதிமன்றம் விதித்த மேற்படி அபராதத் தொகையில், 15 மில்லியன் ரூபாயை ஜூலை 11, 2023 அன்று வரை செலுத்தி முடித்தார்.
இந்த நிலையில்மீதமுள்ள 85 மில்லியன் ரூபாயை 30 ஜூன் 2024 முதல் 20 ஜூன் 2033 வரை 10 தவணைகளில் செலுத்த அனுமதிக்குமாறு, மைத்திரி – நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
தான் ஜனாதிபதிக்கான ஓய்வூதியமாக 97,500 ரூபாயினையும் நாடாளுமன்ற உறுப்பினராக 54,285 ரூபாயினையும் பெறுவதாக தனது சட்டத்தரணிகள் ஊடாக நீதிமன்றுக்குத் தெரித்துள்ள மைத்திரிபால சிறிசேன,தனக்கு விதிக்கப்பட்ட 100 மில்லியன் அபராதத்தைச் செலுத்தி முடிப்பதற்கு மேற்படி கால அவகாசத்தை கோரியுள்ளார்.
ஈஸ்டர் குண்டுத்தாக்குதலை தடுக்கத் தவறியதாக உச்ச நீதிமன்றில் தொடரப்பட்ட வழக்கில், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 100 மில்லியன் ரூபாயும், முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பிரதானி நிலந்த ஜயவர்தன ஆகியோருக்கு 75 மில்லியன் ரூபாயும், முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெணான்டோ 50 மில்லியன் ரூபாயும், முன்னாள் புலனாய்வு பிரதானி சிசிர மென்டிஸ் 10 மில்லியன் ரூபாயும் நட்டஈடாக செலுத்த வேண்டும் என, உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.
தொடர்பான செய்தி: ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு: முன்னாள் ஜனாதிபதி மைத்திரி 10 கோடி ரூபா இழப்பீடு வழங்க வேண்டுமெனவும் உத்தரவு



