தலைப்புச் செய்திகள்

ஆசிரியர், அதிபர்களின் தொழிற்சங்கப் போராட்டம் நாளையும் தொடரும்: ஜோசப் ஸ்டாலின்

சிரியர்கள் மற்றும் அதிபர்கள் முன்னெடுத்துள்ள தொழிற்சங்க போராட்டம் நாளையும் தொடரும் என இலங்கை ஆசிரியர் சங்கம் அறிவித்துள்ளது.

அனைத்து ஆசிரியர்களும் அதிபர்களும் நாளைய தினமும் பணிக்கு கடமைக்குச் சமூகமளிக்க மாட்டார்கள் என, இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இலங்கை ஆசிரியர் சங்க உறுப்பினர்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தை கலைக்க, பொலிஸார் கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகங்களை மேற்கொண்டமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ஜோசப் ஸ்டாலின் கூறியுள்ளார்.

சம்பள முரண்பாடுகள் உட்பட பல கோரிக்கைகளை முன்வைத்து இன்று பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் சுகயீன விடுமுறையை அறிவித்து, வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இன்றைய தினம் இலங்கை ஆசிரியர் சங்க உறுப்பினர்கள், கோட்டை புகையிரத நிலையத்தில் இருந்து கொழும்பு லோட்டஸ் வீதி வரை – ஆர்ப்பாட்ட பேரணியை முன்னெடுத்தனர். இதனைத் தொடர்ந்து, போராட்டக்காரர்களை கலைக்க பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரைகளை பிரயோகித்துள்ளனர்.

ஆசிரியர் மற்றும் அதிபர்களின் இன்றைய தொழிற்சங்கப் போராட்டத்தின் காரமணமாக, பெரும்பாலான பாடசாலைகள் இயங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.