
முன்னாள் சுற்றாடல் துறை அமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் , வடமேல் மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, வடமேல் மாகாண ஆளுநராக இருந்த – லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன, தென் மாகாண ஆளுநராக நியமனம் பெற்றுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் இரண்டு ஆளுநர்களும் இன்று (02) சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர்.
ஜனாதிபதியின் செயலாளார் சமன் ஏக்கநாயக்கவும் இதன்போது கலந்துகொண்டிருந்தார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினராக மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து கடந்த பொதுத் தேர்தலில் தெரிவு செய்யப்பட்ட ஹாபிஸ் நசீர் அஹமட், முஸ்லிம் காங்கிரஸ் எடுத்த ஒழுக்காற்று நடவடிக்கை காரணமாக கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். இதனையடுத்து அவரின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியும் பறிபோனது.
அவர் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழக்கும் போது – சுற்றாடல் துறை அமைச்சராகப் பதவி வகித்திருந்தார்.
முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவராக இருந்த ஹாபிஸ் நசீர் அஹமட் – ஏற்கனவே கிழக்கு மாகாண விவசாய அமைச்சராகவும், கிழக்கு மாகாண முதலமைச்சராகவும் பதவி வகித்திருந்தார்.
முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீமை நேரடியாக எதிர்த்து அரசியல் செய்து வந்த ஹாபிஸ் நசீர் அஹமட், தற்போது மீண்டும் ஆளுநர் பதவியுடன் அரசியலுக்குள் பிரவேசித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.




