அம்பாறை மாவட்ட உள்ளூராட்சிமன்ற பெண்களின் ‘வில் கழக’ (WILL Club) அமர்வு

🕔 February 1, 2024

ம்பாறை மாவட்ட உள்ளூராட்சிமன்ற பெண்களின் ‘வில் கழக’ (WILL Club) அமர்வு சேர்ச் ஃபோ கொமண்ட் கிறவுண்ட் (Search for Common Ground) நிறுவனத்தின் அனுசரணையில், அதன் கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டுக்கான சிரேஷ்ட முகாமையாளர் எம்.ஐ.எம். சதாத் தலைமையில் – அம்பாறையிலுள்ள தனியார் விடுதியொன்றில் அண்மையில் நடைபெற்றது.

கடந்த 04 வருடங்களாக சேர்ச் ஃபோ கொமண்ட் கிறவுண்ட் (Search for Common Ground) நிறுவனம் அம்பாறை மாவட்ட உள்ளூராட்சிமன்ற பெண் உறுப்பினர்கள் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்களை வலுப்படுத்தி – அவர்களுக்கான தனித் தளமாக ‘வில் கழக’ (WILL Club) ஒன்றினை உருவாக்கி அவர்களுக்கு உதவியாக பலதரப்பட்ட பங்குதாரர்கள் குழு ஒன்றினையும் அமைத்து இயங்கி வருகின்றது.

மேற்படி ‘வில் கழக’ (WILL Club) அமர்வில், உள்ளூராட்சிமன்ற பெண் தலைவிகளால்
எழுதப்பட்ட – திட்ட முன்மொழிவுகளின் செயற்பாடுகள் பற்றியும், அச்செயற்பாடுகளால் சமூகத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், தாக்கங்கள், அவற்றைத் தக்கவைத்துக் கொள்வதற்கான வழிமுறைகள் மற்றும் திட்ட செயற்பாடுகளை செயற்படுத்தும் போது – பலதரப்பட்ட பங்குதாரர் குழுவிடமிருந்து பெற்றுக் கொண்ட உதவிகள் பற்றி, உள்ளூராட்சிமன்ற பெண் உறுப்பினர்களுக்கும் பலதரப்பட்ட பங்குதார் குழுவினருக்குமிடையில் கலந்துரையாடல் நடைபெற்றது.

அத்தோடு ‘வில் கழகத்தை’ (WILL Club) மாவட்ட ரீதியில் பதிவு செய்வதற்குத் தேவையான வழிமுறைகள் பற்றி, அம்பாறை அரச சார்பற்ற நிறுவனங்களின் இணைப்பாளர் கே.எம். இர்பான் – இங்கு வளவாளராக கலந்து தெளிவுபடுத்தினார்.

‘வில் கழகத்துக்கான (WILL Club) புதிய நிர்வாகமும் அன்றைய தினம் தெரிவு செய்யப்பட்டது.

இந்நிகழ்வில் சேர்ச் ஃபோ கொமண்ட் கிறவுண்ட் நிறுவனத்தின் திட்ட இணைப்பாளர் கமலவாணி சுதாகரன், அம்பாறை மாவட்ட உள்ளூராட்சிமன்ற ஆணையாளர் கமல் நெத்மினி, ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி. பவாகரன், மனித உரிமை ஆணைக்குழுவின் கல்முனை பிராந்திய இணைப்பாளர் ஏ.சி.ஏ. அசீஸ், தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் வடக்கு – கிழக்கு மாகாண இணைப்பாளர் எம்.எம்.ஜி.பி.எம். றசாட், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் சம்மாந்துறை பிரதேச சபை முன்னாள் தவிசாளருமான ஏ.எம்.எம். நௌசாட், அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் உயர்மட்ட அதிகாரிகள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்