ஸ்ரீ லங்கா கிறிக்கெட் நிறுவன வழக்கு விசாரணை: மேன்முறையீட்டு நீதிமன்ற தலைமை நீதியரசர் விலகுவதாக அறிவிப்பு

🕔 November 14, 2023

ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் நிர்வாகத்தின் செயற்பாடுகளை இடைநிறுத்துவதற்கான, இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணையில் இருந்து மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைமை நீதியரசர் நிஷங்க பந்துல கருணாரத்ன இன்று (14) விலகியுள்ளார்.

இந்த வழக்கு தொடர்பில் விளையாட்டுத்துறை அமைச்சர் தாக்கல் செய்த மனு அழைக்கப்பட்ட போதே, இந்த அவர் இந்த தீர்மானத்தை அறிவித்துள்ளார்.

அண்மைய நாட்களில் விளையாட்டுத்துறை அமைச்சர், சில அமைச்சரவை உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் நியாயமற்ற விமர்சனங்கள் காரணமாக – இந்த விசாரணையில் இருந்து விலக தீர்மானித்ததாக தலைமை நீதியரசர் நிஷங்க பந்துல கருணாரத்ன அறிவித்துள்ளார்.

அதன்படி, இந்த மனு தொடர்பான விசாரணையை வேறு நீதியரசர்களிடம் மாற்ற தீர்மானிக்கப்பட்டுள்ளது.

‘இதேவேளை இன்றைய தினம், ‘கோப்’ எனப்படும் அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவில் முன்னிலையாகுமாறு ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கோப் குழு இன்று பிற்பகல் 2 மணிக்கு கூடவிருந்த நிலையில், ஸ்ரீ லங்கா கிரிக்கெட் தொடர்பில், ஆராயப்படவுள்ளதாக அந்த குழுவின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் பண்டார தெரிவித்திருந்தார்.

ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனம் தொடர்பில் சிக்கல்கள் காணப்படுமாயின், அது தொடர்பில் கோப் குழுவிற்கு அறிவிக்குமாறு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவிற்கு கடந்த 10ஆம் திகதி நாடாளுமன்றில் அறிவுறுத்தியிருந்தார்.

2022ஆம் ஆண்டு இடம்பெற்ற உலகக் கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் போது, ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல், மோசடிகள் மற்றும் முறைகேடுகள் தொடர்பில் விரிவாக ஆராயப்படவுள்ளன.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்