நாடாளுமன்ற உறுப்பினர் சம்பந்தன் பதவி விலக வேண்டும்; சுமந்திரன் கோரிக்கை: 288 நாட்களில் 39 தினமே சபைக்கு வந்துள்ளதாகவும் தெரிவிப்பு

🕔 October 25, 2023

மிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ரா.சம்பந்தன் – அவருடைய முதுமையினால் செயற்பாட்டு அரசியலில் பங்களிப்பு  செய்யமுடியாதிருப்பதன் காரணமாக, அவர் தனது பதவியை ராஜிநாமா செய்ய வேண்டுமென, அந்த கட்சியின் பேச்சாளரும், யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் பகிரங்கமாக கோரியுள்ளார்.

தனியார் தொலைக்காட்சியொன்றில் கலந்துரையாடல் நிகழ்வில் பங்கேற்றபோதே இதன் கூறினார்.

அவர் மேலும் கூறுகையில்;

“288 நாடாளுமன்ற நாட்களில் வெறுமனே 39 நாட்களில் தான் நாடாளுமன்றத்துக்கு சம்பந்தன் வருகை தந்திருக்கின்றார் என்பது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் ஊடாக பெறப்பட்டுள்ள தகவல்களில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

04 மில்லியன் சம்பளம்

அதனடிப்படையில், அவருடைய வருகை வீதம் 13.6சதவீதமாக உள்ளது. அவ்வாறான நிலையில் அவருக்கு நாடாளுமன்ற சம்பளமாக 04 மில்லியன் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

எரிபொருள், தொலைபேசி மற்றும் போக்குவரத்து உள்ளிட்டவற்றுக்காக 04 லட்சத்து 19ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

சம்பந்தனின் முதுமை காரணமாக அவர் தொடர்ச்சியாக நாடாளுமன்றத்துக்கு வருகை தர முடியாதிருக்கின்றமை தொடர்பில் நாங்கள் கரிசனைகளைக் கொண்டிருக்கின்றோம்.

சில ஆண்டுகளுக்கு முன்னர், அவரால் நாடாளுமன்றத்துக்கு சமூகமளிக்க முடியாத நிலைமைகள் ஏற்பட ஆரம்பித்த சந்தர்ப்பத்தில், சம்பந்தனிடத்தி நேரடியாக பதவி விலகுமாறு நான் கோரினேன்.

நிராகரித்தார்

அதன்போது சம்பந்தன் அதனை நிராகரித்திருந்தார். அத்துடன், அவர் அதற்கான காரணத்தினையும் தெளிவு படுத்தினார். 

2020ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின்போது திருகோணமலை மக்கள் தன்னை அந்த மாவட்டத்தின் முதலாம் நபராக தெரிவு செய்திருந்தார்கள் என்றும், அவர்கள் தனது உடல்நிலைமைகளை அறிந்தே தெரிவு செய்திருக்கின்றார்கள் எனவும் குறிப்பிட்டார். அதனை சம்பந்தன் மீண்டும் நினைவு படுத்தினார்.

எனினும், ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக திருகோணமலை மக்களுக்கு செய்ய வேண்டிய பல விடயங்கள் உள்ளன. பிறிதொரு பிரதிநிதியை நாங்கள் நியமித்தாலும் அவர் முழுமையான செயற்பாடுகளை ஆற்றுவரா என்பது பற்றிய பல கரிசனைகள் உள்ளன.

சம்பந்தன் தனது முதுமை நிலைமை காரணமாக அவரால் செயற்பாட்டு ரீதியான விடயங்களை முன்னெடுக்க முடியாதுள்ளது. ஆகவே, அவர் பதவியைத் துறக்க வேண்டும் என்பது தான் எனது தனிப்பட்ட கருத்தாகவுள்ளது. அடுத்துவரும் காலத்தில் அதுதொடர்பான சில நடவடிக்கைளை எடுப்போம்” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்